வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு உலக கால்பந்து அமைப்பான FIFA சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட “அமைதிக்கான விருது” வழங்கப்பட்டது. 2026 உலகக் கோப்பை போட்டிகளுக்கான வரைபடம் வெளியிடும் நிகழ்ச்சியின்போது FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ நேரில் சென்று தங்கக் கோப்பை, தங்கப் பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை டிரம்புக்கு வழங்கினார்.
“அமைதி, ஒற்றுமைக்காக உலக மக்களை இணைத்தவர்” என்று இன்பான்டினோ டிரம்பைப் பாராட்டினார். இந்த விருது, நோபல் அமைதி விருது கிடைக்காத ஏமாற்றத்துக்குப் பிறகு டிரம்புக்கு கிடைத்த பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 5 அன்று வாஷிங்டன் ஜான் எஃப். கென்னடி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், FIFA தலைவர் இன்பான்டினோ, “இது உங்கள் அமைதி விருது, உலகை ஒன்றாக இணைத்ததற்கு நன்றி” என்று கூறி விருதை வழங்கினார். உலகை உயர்த்திப் பிடிக்கும் கைகளை சித்தரிக்கும் தங்கக் கோப்பையை டிரம்ப் பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டார். “இது என் வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய கௌரவங்களில் ஒன்று” என்று டிரம்ப் பதிலளித்தார். அவரது மனைவி மெலனியா டிரம்ப் உள்ளிட்ட குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கூடங்குளம் அணு உலை ஆபத்து: பெட்ரோலை வைத்து கொள்ளை; மத்திய அரசை அட்டாக் செய்த சபாநாயகர் அப்பாவு!

FIFA இந்த அமைதி விருதை நவம்பர் மாதம்தான் அறிமுகப்படுத்தியது. “அமைதி, ஒற்றுமைக்காக அசாதாரண பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்” என்று விளக்கம் கொடுத்துள்ளது. இன்பான்டினோ, “டிரம்ப் உலகில் பல மோதல்களை நிறுத்தினார். அவர் நோபல் அமைதி விருதுக்கு தகுதியானவர்” என்று ஏற்கனவே கூறியிருந்தார். காசா, உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் போர் நிறுத்த முயற்சிகளை டிரம்ப் மேற்கொண்டதாக FIFA பாராட்டியது.
நோபல் அமைதி விருது வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சடோவுக்கு சென்றதால் டிரம்ப் ஏமாற்றம் அடைந்தார். அதற்குள் FIFA தலைவர் இன்பான்டினோ விருது கொடுத்து ஆறுதல் அளித்தார். 2026 உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ இணைந்து நடத்துவதால், அமெரிக்க அரசின் ஒத்துழைப்பு FIFA-வுக்கு ரொம்ப முக்கியம். இந்த விருது, டிரம்புடனான நட்பை வலுப்படுத்தும் நடவடிக்கை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
விருது வழங்கப்பட்டதும் சமூக வலைதளங்களில் “நோபல் கிடைக்காததால் FIFA ஆறுதல் பரிசு கொடுத்துவிட்டது” என்று கிண்டல்கள் பரவின. ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள் “உலகின் மிகப் பெரிய விளையாட்டு அமைப்பு கொடுத்த விருது – இது நோபலைவிட பெரியது” என்று கொண்டாடுகின்றனர். FIFA-வின் இந்த முடிவு, உலகக் கோப்பைக்கு முன் டிரம்புடன் உறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 10வது முறையாக அரியணை!! பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உலக சாதனை! ‘World Book of Records’-ல் பெயர்!