அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுத்துவரும் போர் நடவடிக்கைகள் இலக்குகளை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் முடிவுக்கு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கூறுகையில், “ஈரானின் ஏவுகணைத் திறன்கள், ஏவுதளங்கள், பாதுகாப்புத் தொழில் கட்டமைப்பு, கடற்படை, விமானப்படை மற்றும் வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக அழித்துவிட்டோம். ஈரான் அணுசக்தி ஆயுதம் தயாரிக்கும் நிலைக்கு சற்றும் நெருங்க விடவில்லை. அப்படி ஒரு முயற்சி எடுத்தாலும், அமெரிக்கா உடனடியாகவும் வலிமையாகவும் பதிலடி கொடுக்கும்” என்றார்.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகளைப் பாதுகாப்பது தொடரும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 'பங்கர் பஸ்டர்' குண்டுகள்!! ஈரான் ஏவுகணை தளம் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்!

ஆனால், உலக எரிபொருள் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்கா தொடர்ந்து ஏற்காது என்று திட்டவட்டமாக அறிவித்தார். “ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் நாடுகளே அதைப் பாதுகாக்க வேண்டும். அந்நாடுகள் உதவி கோரினால் மட்டுமே அமெரிக்கா உதவும். ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக ஒழிக்கப்பட்ட பிறகு இத்தகைய உதவிக்கு தேவையே இருக்காது” என்று அவர் வலியுறுத்தினார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தொடர் தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்துள்ள நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் பெரும்பாலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடைபெறுவதால், இந்தப் பகுதியின் பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியைச் சார்ந்தே எரிபொருள் இறக்குமதி செய்கின்றன. டிரம்பின் புதிய நிலைப்பாடு, உலக எரிபொருள் சந்தையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்குப் போர் இப்போது ஒரு திருப்புமுனையை நோக்கி செல்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை நாள் போர் நீடிக்கும்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அசால்ட் பதில்!