அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக புகழ்பெற்ற டைம் பத்திரிகை மீண்டும் ஒரு சர்ச்சையைத் தூண்டியுள்ளது. இஸ்ரேல்-எகிப்து உச்சி மாநாட்டில் மத்திய கிழக்கில் பெற்ற வெற்றியை டிரம்பின் இரண்டாவது பதவிக்கால சாதனையாகப் பாராட்டி, காசா போரில் அவரது செயல்பாட்டைப் புகழ்ந்து டைம் பத்திரிகை கட்டுரை வெளியிட்டது. ஆனால், அட்டைப்படத்தில் தலைமுடி குறைவாகத் தெரியும் டிரம்பின் புகைப்படத்தைப் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அட்டைப்படத்தைப் பார்த்து அதிருப்தி அடைந்த டிரம்ப், தனது சமூக வலைதளப் பக்கமான 'ட்ரூத் சோஷியல்'-இல் கடுமையாக விமர்சித்தார். "டைம் பத்திரிகை என்னைப் பற்றி ஒப்பீட்டளவில் நல்ல கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆனால், கட்டுரைக்கான அட்டைப்படம் மிகவும் மோசமானது. என் தலைமுடியை அவர்கள் மறைத்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என அவர் பதிவிட்டுள்ளார். பாராட்டுகள் இருந்தபோதிலும், தலைமுடி இல்லாத போட்டோவை வெளியிட்டதற்காக டைம்மை கடுமையாகக் கண்டித்துள்ளார்.

டிரம்புக்கும் டைம் பத்திரிகைக்கும் இடையே 'ஏழாம் பொருத்தம்' தான் நிலவி வருகிறது. இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, எலான் மஸ்க்குடன் வெள்ளை அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போட்டோவை டைம் வெளியிட்டபோது, "டைம் பத்திரிகை இன்னும் வெளியாகிக்கொண்டே இருக்கிறதா?" என டிரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த முறை, தனது உருவத்தை 'மோசமாக' காட்டியதாகக் கூறி அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்தப் பதிவு வைரலாகி, பலர் டைம்மின் தேர்வை விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நூலு அந்துபோச்சு! ரூ.15,000 கோடி முதலீடு உண்மையா? முதல்வர், அமைச்சர், சொன்னது புருடாவா? பாக்ஸ்கான் விளக்கம்!
டைம் கட்டுரையில், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் மத்திய கிழக்கில் ஏற்படுத்திய அமைதி முயற்சிகளைப் பாராட்டியுள்ளது. காசா போரை முடிவுக்கு கொண்டுவருவதில் அவரது பங்கை வலியுறுத்தியுள்ளது. ஆனால், அட்டைப்படத்தின் தேர்வு பாராட்டுகளை மறைத்து விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த விமர்சனம், அமெரிக்க ஊடகங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான பதற்றத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறது.
இந்த சம்பவம், டிரம்பின் பிம்பத்தைப் பாதிக்காமல் இருக்குமா என அரசியல் வட்டாரங்கள் கவனிக்கின்றன. டைம் பத்திரிகை இதற்கு பதிலளிக்கிறதா என்பது இனிமேல் தான் தெரியவரும்.
இதையும் படிங்க: செத்து செத்து விளையாடுவோமா? தகன மேடையிலிருந்து எழுந்து ஷாக் கொடுத்த முதியவர்...!