டெஹ்ரான்: ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் முக்கிய நகரங்களில் வணிகர்கள் தொடங்கிய போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துள்ளனர்.
விலைவாசி உயர்வு, பணமதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஈரான் நாணயமான ரியாலின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 14.2 லட்சம் ரியால் என்ற அளவுக்கு சரிந்துள்ளது.
போராட்டங்கள் லோரெஸ்தான், கோம் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையாக மாறியுள்ளன. அரசுப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி!! மக்கள் போராட்டம் வெடித்ததில் 10 பேர் பலி!
பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டு போராட்டங்களை தடுக்க அரசு முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், ஈரான் போராட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது ஈரான் அரசு துப்பாக்கிச்சூடு நடத்தினால், அவர்களை காப்பாற்ற அமெரிக்கா தலையிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் தாக்குதலுக்கு தயாராக உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார். அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்காது என்று அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
இதற்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி லாரிஜானி, போராட்டங்களைத் தூண்டிவிடுவது அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் என்று குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கா தலையிட்டால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நலன்களும் வீரர்களும் பாதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரான் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025 ஜூன் மாதம் ஈரான் அணு மின்நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது. அதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
தற்போதைய போராட்டங்கள் பொருளாதார நெருக்கடியால் தொடங்கிய போதிலும் அரசுக்கு எதிரான அலை வலுவடைந்து வருகிறது. போராட்டங்கள் தொடர்ந்தால் வன்முறை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி!! மக்கள் போராட்டம் வெடித்ததில் 10 பேர் பலி!