மேற்காசியப் போர் மூன்றாவது வாரத்தை எட்டிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “இஸ்ரேல் இனி ஈரானைத் தாக்காது. ஆனால், கத்தார் மீது ஈரான் மீண்டும் கை வைத்தால், ஈரானின் ஒட்டுமொத்த எரிவாயு தளங்களையும் அமெரிக்கா தரைமட்டமாக்கும்” என்று அவர் தன் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் சமீபத்தில் ஈரான் மற்றும் கத்தார் இடையே பகிர்ந்து கொள்ளும் உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளமான சவுத் பார்ஸ் தளத்தின் ஈரான் பகுதியைத் தாக்கியது. இதற்கு பதிலடியாக ஈரான், கத்தாரின் ராஸ் லபான் (Ras Laffan) இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை ஏவுகணைகளால் தாக்கியது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டு, உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய எல்.என்.ஜி. ஏற்றுமதி மையங்களில் ஒன்றான ராஸ் லபான் மீதான இந்தத் தாக்குதல் உலகளாவிய எரிவாயு விநியோகத்தை பெரிதும் பாதித்துள்ளது.
கத்தார் இந்த மோதலில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, கத்தாரில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிகளை 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் எரிசக்தி நிலையங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதால், அங்கு சில வசதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? இந்தியா வரும் எரிவாயு கப்பல்கள்! ஈரானுடன் மத்திய அரசு தீவிர பேச்சு!

இந்த நிலையில் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், “இஸ்ரேல் நடத்திய சவுத் பார்ஸ் தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்னதாக எதுவும் தெரியாது. கத்தார் எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை. கத்தார் ஒரு அப்பாவி நாடு. அதன் மீது ஈரான் தேவையின்றி தாக்குதல் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல” என்று கூறினார்.
மேலும், “இஸ்ரேல் இனி சவுத் பார்ஸ் மீது தாக்குதல் நடத்தாது. ஆனால் ஈரான் மீண்டும் கத்தார் மீது தாக்கினால், அமெரிக்கா (இஸ்ரேல் உதவியுடனோ அல்லது இல்லாமலோ) ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு தளம் முழுவதையும் இதுவரை கண்டிராத அளவுக்கு சக்திவாய்ந்த தாக்குதலால் அழித்துவிடும். இத்தகைய வன்முறையை நான் விரும்பவில்லை. ஆனால் தேவைப்பட்டால் தயங்க மாட்டேன்” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்தப் போர் மற்றும் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உலகப் பொருளாதாரம் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், டிரம்ப்பின் எச்சரிக்கை பிராந்தியப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஜெய்சங்கர் தரமான சம்பவம்! இந்தியா - ஈரான் இடையே ஒப்பந்தம்! இனி ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்!!