தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர்.
இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு, காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, படுகாயம் அடைந்த 40க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: கொள்கையா? கிலோ என்ன..? இவங்க எல்லாம் நம்மள பத்தி பேசுறாங்க… விஜய் பதிலடி..!
கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த ஆறு பேருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என்று தெரிவித்தார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விஜயை பாக்கணுமா? மக்கள் சந்திப்பில் செக்... புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட முக்கிய தகவல்...!