பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் HMS பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் இருந்து ஜூன் 14ல் புறப்பட்ட F35B போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பில் இருந்தபோது எரிபொருள் பற்றாக்குறை பிரச்னையை எதிர்கொண்டது. இதை அடுத்து பைலட் அவசர உதவி கேட்டதால் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இறங்க அனுமதிக்கப்பட்டது.
மத்திய அரசு உத்தரவுபடி விமானத்துக்கு எரிபொருள் வழங்கப்பட்டது. ஆனாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தால் பறக்க முடியவில்லை. பழுது நீக்கும் முயற்சியில் பிரிட்டன் கடற்படை பொறியாளர்கள், விமானம் தயாரித்த நிறுவனத்தின் பொறியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. ஜூன் 14 முதல் மூன்று வாரங்களாக இந்த விமானம் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 கோடி மதிப்புடைய அதிநவீன போர்விமானம் இன்னொரு நாட்டில் இப்படி பழுதாகி நிற்பது பிரிட்டனுக்கு பெரும் அவமானமாக கருதப்படுகிறது. இது குறித்து பிரிட்டன் பார்லிமென்டில் கன்சர்வேடிவ் கட்சி எம்பி ஒபிஸ் ஜெக்டி கேள்வி எழுப்பினார். இந்திய விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர் விமானத்தை மீட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானத்தை கொண்டு வர இன்னும் எத்தனை காலம் ஆகும்.

அதில் இருக்கும் நவீன தொழில்நுட்பங்களின் ரகசியத்தை பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார். பிரிட்டன் அமைச்சர் லுாக் பொல்லார்டு இந்த கேள்விகளுக்கு பதில் சொன்னார். விமானம் பிரிட்டீஷ் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இந்தியா சிறப்பான உதவிகளை செய்து வருகிறது. விமானத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டீஷ் விமானப்படை பணியாளர்கள், 24 மணி நேரமும் அதன் அருகிலேயே உள்ளனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் இறங்கிய ரூ.1000 கோடி போர் விமானம்.. மீட்பதில் ஏற்பட்ட சிக்கல்.. இங்கிலாந்து எடுத்த அதிரடி முடிவு..!
இதையடுத்து விமானத்தை தனித்தனியாக பிரித்து கொண்டு செல்வதா, சரக்கு விமானத்தில் துாக்கிச் செல்வதா என்பது குறித்து பிரிட்டன் அரசு ஆலோசித்து வருகிறது. F35B போர் விமானம் அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் என்ற முன்னணி விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது, குறுகிய தொலைவு கொண்ட ஓடுபாதையிலும் டேக்ஆப் ஆகும்.

ஹெலிகாப்டர் போல செங்குத்தாக தரை இறங்கும் திறன்களை கொண்டது. ஸ்டெல்த் எனப்படும் திறன்கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானமாகும்.
ரேடார்களில் கண்டறிய முடியாத தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டது. இந்த விமானம், அமெரிக்கா தவிர ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது. வேறு எந்த நாடுகளிடமும் இல்லை. இதனால் இந்த விமான தொழில்நுட்பம் வெளியில் கசிந்துவிடக்கூடாது என்பதில் பிரிட்டன் உறுதியாக உள்ளது. திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் விமானம் தரை இறங்கியபோது, அதன் பைலட் விமானத்தை விட்டு சிறிது துாரம் கூட நகர மறுத்து விட்டார். சட்டபூர்வமான நடைமுறைகளுக்காக ஏர்போர்ட் உள்ளே வரும்படி அழைத்தபோது கூட மறுத்தார்.

தனக்கு ஒரு நாற்காலி வேண்டும் என்று கேட்டு வாங்கி, மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல், விமானம் அருகிலேயே உட்கார்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி வரை இந்தியாவில் வைத்து பழுது நீக்க முடியாவிட்டால் விமானத்தை பார்ட் பார்ட்டாக பிரித்து போர் விமானத்தில் பிரிட்டன் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?