மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் காசாவில் தீவிரமான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது, இதன் விளைவாக 57,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.
இந்த மோதல், காசாவில் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது, குறிப்பாக உணவு உதவி மையங்களில் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்கள் பாலஸ்தீனர்களை பெரும் இழப்புக்கு உள்ளாக்கியுள்ளன. இந்த நிலையில் மே 27 முதல், அமெரிக்க-இஸ்ரேல் ஆதரவு காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மூலம் உணவு விநியோக மையங்கள் இயங்கத் தொடங்கின. இந்த மையங்கள், ஐ.நா.வின் பாரம்பரிய உதவி விநியோக அமைப்பை மாற்றி, இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டன.
ஆனால், இந்த மையங்களை அணுக முயன்ற பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காசாவின் சுகாதார அமைச்சகத்தின் படி, மே மாதம் முதல் ஜூலை 2025 வரை, உணவு உதவி பெற முயன்ற 743 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், 4,891 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல்கள், ராஃபா, நெட்ஸாரிம் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் உள்ள உதவி மையங்களுக்கு அருகே நடந்துள்ளன.
இதையும் படிங்க: கெத்து காட்ட ட்ரம்ப் சொன்ன பொய்.. ஈரான் செய்த சம்பவம்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய அமெரிக்கா!

ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசானி, இந்தத் தாக்குதல்கள் குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளார். 2025 ஜூன் மாதம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், இஸ்ரேல் “உணவை ஆயுதமாக்குவதாக” என குற்றம் சாட்டினார்.
“பசியால் வாடும் பாலஸ்தீனர்கள் உணவு பெற முயலும்போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மனித உரிமை மீறலாகும். இது போர்க்குற்றமாக கருதப்படலாம்,” என அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த மையங்களின் இயக்க நேரம் மற்றும் இடம் குறித்த தெளிவான தகவல் இல்லாததால், பொதுமக்கள் ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மே மாத இறுதியில் இருந்து காசாவில் உள்ள உதவி மையங்களிலிருந்து உணவு பெற முயன்றபோது பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஜூலை 7ம் தேதி வரை, நாங்கள் இதுவரை 798 கொலைகளைப் பதிவு செய்துள்ளோம். அவற்றில் 615 பேர் உதவி மையங்களில் உணவு பெற முயன்ற போது கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 183 பேர் உதவி மையங்கள் அருகில் உள்ள பகுதிகளில் கொல்லப்பட்டு உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குற்றவாளி நெதன்யாகுவை ஏன் அரஸ்ட் பண்ணல? இத்தாலி, பிரான்ஸ், கிரிஸ் நாடுகளுக்கு ஐ.நா நிருபர் கேள்வி..!