அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிபவர்களுக்கு மிகப்பெரிய அடி கொடுத்துள்ளனர். சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் தற்ப்போது 5,000 அமெரிக்க டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 4.49 லட்சம் 'கைது கட்டணம்' வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், கைது செய்யப்பட்ட உடனேயே இந்த அபராதத்தை செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், எதிர்காலத்தில் அவர்கள் எந்த குடியேற்ற சலுகைகளுக்கும் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்களை கடுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறார். அமெரிக்காவில் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே சிறப்பு விமானங்கள் மூலம் தங்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இருப்பினும், இன்னும் சிலர் அங்கேயே இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அமெரிக்க அதிபர் அதிர்ச்சியூட்டும் முடிவை எடுத்துள்ளார்.
இனிமேல், எல்லையைத் தாண்டி அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் ஒவ்வொரு குடியேறியவருக்கும் மிகப்பெரிய தொகை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆவணமற்ற குடியேறியவர்களுக்கு 5,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.4.49 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜனநாயகம், தேர்தல் உதவி நிறுவனத்தின் தலைவராகும் ஞானேஷ்குமார்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 'ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் சட்டத்தின்' கீழ் இந்த அபராதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் செப்டம்பரில் அமல்படுத்தப்பட்ட போது, 1000 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், தற்போது 5,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகை 'கைது கட்டணம்' என்று அழைக்கப்படுகிறது. 14 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் எவரும் இந்த அபராதத்தை செலுத்த வேண்டும். இருப்பினும், இது எல்லைப் பகுதிக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் பொருந்தும். புலம்பெயர்ந்தவர் எங்கு கைது செய்யப்பட்டாலும், அவர்கள் அமெரிக்காவில் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள், அல்லது அவர்களுக்கு குடியேற்ற வழக்குகள் உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், கைது செய்யப்பட்டவுடன் உடனடியாக இந்தக் கட்டணம் விதிக்கப்படுகிறது.
யாராவது 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த தவறினால், அந்தத் தொகை அமெரிக்க அரசாங்கத்திற்குக் கடன்பட்ட அதிகாரப்பூர்வ கடனாக மாறும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது. இந்தக் கடன் அந்த நபரின் பதிவேட்டில் பதிவு செய்யப்படும், மேலும் அந்த நபர் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைவதையோ அல்லது பிற குடியேற்ற சலுகைகளைப் பெறுவதையோ தடுக்கலாம்.
எல்லைக் கைதுகளின் எண்ணிக்கை பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாக (நவம்பரில் 7,300) உள்ள நிலையில், கூட்டாட்சி முகவர்கள் நாட்டின் உட்புறத்தில் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ போன்ற நகரங்களில் கார் கழுவும் இடங்கள், ஹோம் டிப்போ வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பிற பொது இடங்களில் கைதுகள் செய்யப்படுகின்றன. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் இந்தக் கடுமையான நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: அதிபர் டிரம்ப் கொடுத்த பிரமாண்ட விருந்தில் பிரபலங்கள்..!! யார் யார் தெரியுமா..??