ஈரான் - அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சு இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் தொடங்கியுள்ளது. லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில், ஈரான் தனது நிபந்தனைகளை முன்வைத்த போதிலும், இரு தரப்பு பிரதிநிதிகளும் இஸ்லாமாபாத் வந்தடைந்து பேச்சுக்கு தயாராகி உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரான் - இஸ்ரேல் இடையே மூண்ட போரில் அமெரிக்கா தலையிட்டதால் பதற்றம் அதிகரித்தது. ஈரான் உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதால், ஈரான் கோபமடைந்து அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது பதிலடி கொடுத்தது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டு, உலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில், கடந்த 8ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியிருந்தார். ஈரானும் பாகிஸ்தானை நட்பு நாடாக கருதியதால், இஸ்லாமாபாத்தில் பேச்சு நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இதையும் படிங்க: வீராப்பு பேசிய பாக்., ராணுவ அமைச்சர்! இஸ்ரேல் மிரட்டலுக்கு பயந்து பதிவை நீக்கி கப்சிப்!
எனினும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் ஈரான் கோபமடைந்துள்ளது. “லெபனான் போர் நிறுத்தம் மற்றும் முடக்கப்பட்ட ஈரான் சொத்துக்கள் விடுவிக்கப்படும் வரை பேச்சு தொடங்க முடியாது” என ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இன்று ஈரான் சார்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அர்காச்சி தலைமையிலான குழுவும், அமெரிக்க சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும் இஸ்லாமாபாத் வந்தடைந்தனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் தலைமையில் இரு குழுக்களும் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். இஸ்லாமாபாத் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலில் இரு தரப்பு பிரதிநிதிகளும் தனித்தனியாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புடன் பேச்சு நடத்துகின்றனர். அதன் பின்னர் மூன்று நாடுகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக அமர்ந்து பேச்சு நடத்த உள்ளனர்.
லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் பேச்சில் அர்த்தமில்லை என ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அதேசமயம், பேச்சுக்கு அழைத்துவிட்டு விளையாட்டு போக்கு காட்டினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உலக நாடுகள் பல, இந்தப் போர் முற்றிலும் முடிவுக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: லெபனானுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் சம்மதம்!! அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுக்கு தயார்!!