இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளின் ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதலாக 12.5 சதவீத இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா பரிந்துரை செய்திருப்பது சர்வதேச வர்த்தக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டாய உழைப்பு முறைகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் அமெரிக்க சந்தையில் நுழைவதைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியா, சீனா, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சவூதி அரேபியா உள்ளிட்ட 54 நாடுகள் கட்டாய உழைப்பால் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் விதிகளை முழுமையாக அமல்படுத்தத் தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் சில பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக மறுத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் கட்டாய உழைப்பின் மூலம் உருவாக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும், இது இந்தியாவின் தொழில் மற்றும் ஏற்றுமதி துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: உலகளாவிய வரி சட்டவிரோதம்! 10% வரி செல்லாது! அதிபர் ட்ரம்புக்கு அமெரிக்க நீதிமன்றம் குட்டு!

மேலும், இந்த விவகாரத்தை கூடுதல் வரி விதிப்பின் மூலம் அல்லாமல், இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை குழுவினர் தற்போது டெல்லியில் முகாமிட்டு, இந்திய அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், அமெரிக்காவுடன் ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தம் கொண்டுள்ள நாடுகள் கட்டாய உழைப்பை தடுக்கும் வகையில் ஓரளவு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், அவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி மட்டுமே விதிக்கப்படும் எனவும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய வரி பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், இந்தியாவின் ஏற்றுமதி துறைக்கும், அமெரிக்க சந்தையை நம்பி செயல்படும் பல தொழில்களுக்கும் தாக்கம் ஏற்படலாம் என்பதால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: குஷ்பூ வீட்டில் டும்.. டும்.. டும்..! முதல்வர் விஜய்யை நேரில் சென்று அழைத்த சுந்தர். சி குடும்பத்தினர்..!!