போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது புரியாத புதிராக இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியா - பாகிஸ்தான் இடையோன போர் நிறுத்த அறிவிப்பை இந்திய அரசோ அல்லது பாகிஸ்தான் அரசோ வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இது புரியாத புதிராக இருக்கிறது. அதேநேரம், போர் நிறுத்தத்தை விசிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது மிகவும் அவசியம்.

ஒட்டுமொத்தமாகப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக ஜனநாயகக் கட்சிகள் அனைத்தும் குரல் எழுப்ப வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் சுமுகமான உறவைப் பேண வேண்டும். போர் வேண்டும் என்று விரும்புகிற சக்திகள் போர் வேண்டாம் என்று சொல்பவர்கள் மீது அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்பன்கள் தீவிரவாதிகள்.. மகன்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் பொறுப்புகளில்.. வெளங்குமா இது.?

இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை கூறியது கற்பனைவாதம். அண்ணாமலை கூறுவதுபோல, ஒரு நாட்டை எளிதாக அழித்து, ஒழித்துவிட முடியாது. நாடே இல்லாமலேயேகூட பயங்கரவாதம் இருக்கிறது. அமைதி தேவை என்பதுதான் மக்களின் விருப்பம் ஆகும். எங்களைப் பொறுத்தவரை டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்கிற எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று திருமாவளவன் கூறினார்.
.
இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!