தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், சேவெள்ளா அருகே மீர்ஜாகூடா பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் தெலங்கானா அரசு சாலை போக்குவரத்து கழக (TGSRTC) பேருந்து மீது கிராவல் (கான்கிரீட் கற்கள்) ஏற்றிய டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் 17 பேர் உயிரிழந்தனர். இதில் 3 மாத குழந்தை ஒன்றும் அடங்கும். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சேவெள்ளா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாண்டூர் டிப்போவைச் சேர்ந்த எக்ஸ்பிரஸ் பேருந்து, ஞாயிறு விடுமுறை முடிந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் சுமார் 70 பயணிகள் பயணித்தனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள், தொழிலாளர்கள். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி தவறான பாதையில் அதிவேகமாக வந்து, இரு சக்கர வாகனத்தை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் முன்பகுதியில் மோதியது. மோதிய வேகத்தில் டிப்பரில் இருந்த கிராவல் முழுவதும் பேருந்துக்குள் கொட்டி, பயணிகள் அதில் சிக்கி நசுங்கினர். இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நொறுக்கப்பட்டதோடு, டிப்பர் டிரைவர் உட்பட இரு வாகன ஓட்டிகளும் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: பல எதிர்ப்புகளுக்கு மத்தியில்... தெலங்கானா அமைச்சரானார் Ex. கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன்..!!
விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த கிராம மக்கள், போலீசார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு கிராவலை அகற்றி, சிக்கியவர்களை வெளியே எடுத்தனர். பேருந்துக்குள் இருந்து 17 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதிவேகம், டிரைவரின் அஜாக்கிரதை ஆகியவை முதற்கட்ட காரணங்களாகத் தெரிகின்றன.
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தார். உடனடியாக முதன்மைச் செயலர், டிஜிபி ஆகியோரை அனுப்பி மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார். காயமடைந்தவர்களை ஹைதராபாத்துக்கு இடமாற்றம் செய்யவும், மாவட்ட ஆட்சியரை நிவாரணப் பணிகளுக்கு அறிவுறுத்தினார். போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர், TGSRTC நிர்வாக இயக்குநருடன் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஸ்ரீதர் பாபு விரைவில் அறிக்கை கோரினார்.

மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். மாநிலத்தில் தொடர்ச்சியாக நிகழும் சாலை விபத்துகள் குறித்து பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தெலுங்கானாவில் சாலை பாதுகாப்பு குறித்து இந்த விபத்து மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த மாதம் கர்னூல் பேருந்து தீ விபத்துக்குப் பிறகு இது மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக மாறியுள்ளது...!!
இதையும் படிங்க: பல எதிர்ப்புகளுக்கு மத்தியில்... தெலங்கானா அமைச்சரானார் Ex. கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன்..!!