பிரேசிலில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அரசு மரியாதையை ஏற்ற மோடி, அந்நாடில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேசினார். மோடியை வரவேற்று பிரேசில் வாழ் இந்தியர்கள் நடத்திய நடனத்தை மோடி பார்த்து ரசித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை கருப்பொருளாக அமைந்த நடனம் பிரதமர் மோடியை கவர்ந்தது.
பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்கம் ரியோ டி ஜெனிரியாலேவில் பிரேசில் அதிபர் லுாலா, பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களும் கட்டித் தழுவி தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.
பின், உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் புதிய உறுப்பினர்களான எகிப்து, இந்தோனேசியா, எத்தியோபியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் தலைவர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து பிரிக்ஸ் உச்சி மாநாடு அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
இதையும் படிங்க: கெடு விதிக்கும் ட்ரம்ப்.. அடங்கிப்போவாரா மோடி! ராகுல்காந்தி சவாலால் ஆட்டம் காணும் பாஜக!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நடப்பு சூழலில் குளோபல் சவுத் நாடுகளுக்கான முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரம் இது. வளர்ச்சி, வளங்கள் பகிர்வு, பாதுகாப்பு, போன்ற பல விஷயங்களில் குளோபல் சவுத் நாடுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன. 20ம் நுாற்றாண்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளால், பருவநிலை மாற்றம், போர், பெருந்தொற்று பரவல், பொருளாதார மந்தநிலை, சைபர் குற்றங்கள் போன்ற 21ம் நுாற்றுண்டுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை.
ஒவ்வொரு வாரமும் புதிய அப்டேட்களை சந்திக்கும் ஏஐ யுகத்தில், புதுமையை ஏற்க மறுக்கும் அமைப்புகளால் எந்த நன்மையும் விளையாது. எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட மாற்றம் அல்லது புதுப்பித்தலை விரும்பாத சர்வதேச அமைப்புகளால் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. 21ம் நுாற்றாண்டின் சாப்ட்வேர்களை, 20ம் நுாற்றாண்டின் டைப் ரைட்டர்களால் கையாள முடியாது. கால சூழலுக்கு ஏற்ப சர்வதே அமைப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்த மாற்றம் பெயரளவில் மட்டும் இல்லாமல் உண்மையில் அது செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும்.

உலகின் மூன்று பங்கு மக்களுக்கு சர்வதேச அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. சர்வதேச பொருளாதாரத்திற்கு கை கொடுக்கும் குளோபல் சவுத் நாடுகளுக்கு சர்வதேச அமைப்பில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. குளோபல் சவுத் நாடுகள் இல்லாத சர்வதேச அமைப்புகள் நெட்வொர்க் இல்லாத சிம்கார்டுடன் கூடிய மொபைல் போன்களுக்கு சமம்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் விரிவாக்கம் சர்வதேச நாடுகளுக்கு நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது. நமது இந்த பலத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் காண்பிப்போம்.

குளோபல் சவுத் நாடுகளுக்கு சர்வதேச அரங்கில் அங்கீகாரம் கிடைப்பது அவசியம். சர்வதேச அமைப்புகளில் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப அனைத்தையும் புதுப்பிக்கும் இந்த யுகத்தில், உலக நாடுகளின் நன்மை கருதி, பல்வேறு முக்கிய சர்வதேச அமைப்புகளில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதன் மூலம் ஆக்கப்பூர்வமாக செயல்பாடுகள் அரங்கேற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரேசில் பறந்தார் பிரதமர் மோடி.! பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானை கதறவிட காத்திருக்கும் சம்பவம்!!