மகாராஷ்டிர மாநிலத் துணை முதலமைச்சர் அஜித் பவார் இன்று காலை பாராமதியில் நிகழ்ந்த விமான விபத்தில் அகால மரணமடைந்த செய்தி, இந்திய அரசியல் வட்டாரத்தில் ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் பவாரின் மறைவு குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மகாராஷ்டிராவின் பாராமதியில் நிகழ்ந்த இந்தத் துயரமான விமான விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். துயரத்தின் இந்தத் தருணத்தில் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்குத் தேவையான மனவலிமையையும் தைரியத்தையும் வழங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், அஜித் பவார் ஜி மக்களின் தலைவராக விளங்கியவர்; நிர்வாகத் திறமையிலும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது மறைவு மகாராஷ்டிராவிற்குப் பேரிழப்பு என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது செய்தியில், அஜித் பவார் அவர்களின் எதிர்பாராத மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தனது நீண்ட பொது வாழ்வில், மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் செழுமைக்காக அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். மக்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும், பொதுச் சேவையில் அவர் காட்டிய தளராத அர்ப்பணிப்பும் என்றென்றும் நினைவு கூரத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட், "இந்த அநீதியை அனுமதிக்க முடியாது” - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
விபத்தின் பின்னணி: இன்று காலை சுமார் 8:45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது அஜித் பவார் பயணித்த சிறிய ரக லியர்ஜெட் 45 விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரோடு பயணித்த பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் இரண்டு விமானிகள் என ஐந்து பேரும் உயிரிழந்ததை சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் (DGCA) உறுதி செய்துள்ளனர்.
இதையும் படிங்க: "மேக் இன் இந்தியா - கடலிலும் ஒரு சாதனை'' சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இன்று களமிறங்கும் ‘சமுத்திரா பிரதாப்’!