வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் நடவடிக்கையை கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கியது. இதன்படி, 7.24 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன, இதில் 22.34 லட்சம் பேர் இறந்தவர்கள், 36.28 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் 7 லட்சம் பேர் பல இடங்களில் பதிவு செய்திருந்ததாக ஆணையம் தெரிவித்தது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி, திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இவ்வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி அமர்வு விசாரித்து வருகிறது. ஜூலை 10ஆம் தேதி நடந்த விசாரணையில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததுடன், வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் கூறியது. இதற்கு உச்ச நீதிமன்றம், குறுகிய காலத்தில் இத்தகைய நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்பட்டது என கேள்வி எழுப்பி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை சரிபார்ப்புக்கு பயன்படுத்த பரிந்துரைத்தது.
இதையும் படிங்க: ஆதார் குடியுரிமைச் சான்று இல்லை.. தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் சப்போர்ட்..!!
எதிர்க்கட்சிகள் இந்நடவடிக்கையை தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) உடன் தொடர்புபடுத்தி, வாக்குரிமை பறிக்கப்படுவதாக விமர்சித்தன. 80% வாக்காளர்கள் தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக ஆணையம் தெரிவித்தாலும், புலம்பெயர் தொழிலாளர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் போன்றோருக்கு ஆவணங்கள் சமர்ப்பிப்பது சவாலாக உள்ளது. இவ்வழக்கு அடுத்த விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பரிசீலிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. நீதிபதிகள், ஆதார் அட்டை சட்டப்பூர்வ அந்தஸ்து பெற்றிருந்தாலும், அது குடியுரிமைக்கான சான்றாக கருதப்பட முடியாது என்று தெளிவுபடுத்தினர்.

இருப்பினும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியை எளிதாக்க, ஆதாரை பிற 11 ஆவணங்களுடன் இணைத்து பயன்படுத்தலாம் என்று கூறினர். ஆதார் அட்டையின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்த உத்தரவு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் வெளிப்படைத்தன்மையையும், எளிமையையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெட்ரோல் உடன் 20% எத்தனால் கலப்பு.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்..!!