கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (V.S. Achuthanandan) ஜூலை 21ம் தேதியான இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 101.
2006 முதல் 2011 வரை கேரளாவின் முதலமைச்சராகப் பதவி வகித்த இவர், மாநில அரசியலில் தனித்துவமான முத்திரை பதித்தவர். ஆலப்புழாவில் 1923இல் பிறந்த அச்சுதானந்தன், வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து உயர்ந்து, 1940இல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். புன்னப்ரா-வயலார் போராட்டத்தில் (1946) பங்கேற்று, காவல்துறை வன்முறையை எதிர்கொண்டவர்.

1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து CPI(M) உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார். முதலமைச்சராக இருந்தபோது, மூணாறு நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கம், கோச்சி எம்.ஜி. ரோடு மீட்பு, திருட்டு திரைப்பட எதிர்ப்பு மற்றும் லாட்டரி மாஃபியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் புகழ் பெற்றார்.
இதையும் படிங்க: கேரள Ex. முதல்வர் அச்சுதானந்தன் கவலைக்கிடம்.. கவலையில் தொண்டர்கள்..!
சுற்றுச்சூழல், பெண்கள் உரிமை, ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் அவரது உறுதியான நிலைப்பாடு அவரை மக்கள் தலைவராக உயர்த்தியது. 2019இல் பக்கவாதத்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலகிய அவர், கடந்த ஜூன் 23இல் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவு கேரள அரசியலில் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மேலும் அவரது உடல் ஆலப்புழாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஜூலை 23ம் தேதி இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அச்சுதானந்தன் மறைவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன்; கொள்கை ரீதியான அரசியல், பொது சேவை உணர்வை கொண்ட பெருந்தலைவர் அவர். தமிழ்நாட்டு மக்கள் சார்பாக செவ்வணக்கம்.அவரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும், சிபிஐஎம் பணியாளர்களுக்கும், கேரள மக்களுக்கும் எனது இரங்கல்.. எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்துவார் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கேரளா மாநிலமும், இந்தியாவும் ஒரு உண்மையான மக்கள் வீரரை இழந்துவிட்டது. அச்சுதானந்தன் மக்களுக்காக போராடுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு வழிக்காட்டியாக இருந்த அச்சுதானந்தன் தற்போது ஓய்வு எடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தோழர்.வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் வயது மூப்பின் காரணமாகவும் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மு.க.முத்து மறைவு.. அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் இரங்கல்..!