மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, பாலியல் வன்கொடுமை, போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து சேலம் புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சித்தன் தலைமை வகித்தார். எடப்பாடி நகர கழக செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார்.
முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவதால் ஸ்டாலின் அரண்டு போய் இருப்பது அவரது உளறல் பேச்சிலேயே அது தெரிகின்றது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் தமிழக மக்கள் நலனுக்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள தொகையை வழங்கும்படி கோரிக்கை விடுத்ததால் 3000 கோடி மத்திய அரசில் இருந்து நிதி வழங்கப்பட்டது.
திமுக 39 எம்பிக்களும், ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு அவர்களால் எதுவும் சாதிக்க முடியவில்லை. 520 வாக்குறுதிகள் கொடுத்து அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாத சர்வாதிகார அரசாக திமுக உள்ளது.
இதையும் படிங்க: “போச்சே... போச்சே..” ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கதறி அழுத தாய்குலம்..!
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதை சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கூறிய போது, முதலமைச்சர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது கோபம் என்று கூறினார். ஆனால் இப்போது காவல்துறையினர் மக்களிடம் கனிவு காட்ட வேண்டும் என்று காலம் கடந்து அறிவுறுத்துகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் திமுக மாநாட்டில் கலந்து கொண்டவர் என்று சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியபோது, பதில் இல்லாமல் கேள்வி எழுப்பியவர்களை வெளியேற்றம் செய்தனர்.
திமுக ஆட்சியில் நிலவும் அக்கிரமங்களை கண்டு பொங்கி எழாமல் போராட்டம் குணம் கொண்ட பொதுவுடமைவாதிகள் கூட பணம் பெற்றுக் கொண்டு அமைதியாக உள்ளனர். கருணாநிதி குடும்பத்திற்கு தான் முதலமைச்சர் பதவி சொந்தம் என்றால், எதற்கு தேர்தல் என்று கேள்வி எழுப்பிய அவர் நான்கரை ஆண்டுகள் தமிழக மக்களுக்கு எந்த திட்டமும் தராமல் வீட்டிற்கு செல்லும்போது உங்களுடன் ஸ்டாலின் என்று சொல்லுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவார் என திமுகவினரே சொல்லுகின்றனர். மக்களாட்சி மகத்துவத்திற்குள் மன்னராட்சியை விதைத்து, வளர்த்து வாரிசு அரசியல் நடத்தி வரும் திமுகவை 2026 சட்டமன்ற தேர்தலில் ஓட ஓட விரட்ட வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: வாயை வாடகைக்கு விட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு தக்க பாடம் புகட்டப்படும் ... திமுக நிர்வாகி எச்சரிக்கை...!