வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்ததால் அவாமி லீக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியா தப்பி வந்தார். அதைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. 2026 பிப்ரவரி 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கடந்த வாரம் இன்குலாப் மஞ்சோ அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஷெரீஃப் உஸ்மான் ஹாதி (32) மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்லப்பட்டார். இந்தியாவுடன் தொடர்புடையவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஹாதியின் மரணத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊடக அலுவலகங்கள், கலாச்சார நிறுவனங்கள் தாக்கப்பட்டன.
இதற்கிடையே, மத நிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, மைமென்சிங் பகுதியில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (27) வன்முறைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் மரத்தில் கட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வருவதாக அச்சம் நிலவுகிறது.
இதையும் படிங்க: இந்து இளைஞர் கொலை! வருத்தம் தெரிவிச்சா போதுமா? ஆக்சன் வேணும்! வங்கதேச அரசுக்கு சசி தரூர் அறிவுறுத்தல்!

தலைநகர் டாக்காவில் உள்ள டாக்கா பல்கலையில் நேற்று (டிசம்பர் 26) நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் "நான் ஹாதி, நான் ஹாதி" என்று முழக்கமிட்டு, ஹாதி கொலைக்கு நீதி கோரினர். இந்தியாவுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன. பல்கலையில் உள்ள ஒரு உணவகம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது.
வங்கதேச இடைக்கால அரசும் எதிர்க்கட்சிகளும் இந்தியாவை வன்முறைகளுக்கு காரணமாகக் குற்றம்சாட்டி வருகின்றன. ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கக் கோரி இந்தியத் தூதரகங்கள் அருகே போராட்டங்கள் நடந்தன. இந்தியா இதை மறுத்து, சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு அழுத்தம் தந்து வருகிறது.
வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் இடைக்கால அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. தேர்தலுக்கு முன்பு அமைதி திரும்புமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இந்தியா-வங்கதேச உறவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் தொடரும் வன்முறை!! ஓயாத அழுகுரல்!! டாக்காவில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி!