டெல்லி: 2020 கல்வான் மோதலுக்குப் பிறகு சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக உயர்மட்ட அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசு ஒப்பந்தங்களில் பங்கேற்க சீன நிறுவனங்கள் மத்திய அரசின் சிறப்புக் குழுவிடம் பதிவு செய்து பாதுகாப்பு மற்றும் அரசியல் ஒப்புதல் பெற வேண்டும் என்ற கட்டாயம் விரைவில் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
2020 ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவங்கள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான கோபம் உச்சமடைந்தது. இதையடுத்து சீன நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அரசு திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்க முடியாத வகையில் விதிகள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக, அரசு ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் சீன நிறுவனங்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவிடம் பதிவு செய்து, அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது.
இதையும் படிங்க: பயங்கரவாதமே இல்லாத காஷ்மீர் தான் இலக்கு!! அதிகாரிகளுக்கு அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்!
தற்போது எல்லைப் பகுதிகளில் பதற்றம் குறைந்து, இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான உறவு மேம்பட்டு வருகிறது. இதனால் வர்த்தக உறவுகளை மீண்டும் சீராக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், "சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகள் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், உதிரிபாகங்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் புகார் தெரிவித்துள்ளன. இதனால் தடையை தளர்த்த பரிசீலனை நடக்கிறது" என்று கூறின.
எனினும், இந்த முடிவு இறுதி செய்யப்படுவதற்கு பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களின் பங்கேற்பு இல்லாததால் சில துறைகளில் திட்டங்கள் தாமதமடைவதும், செலவு அதிகரிப்பதும் அரசுக்கு சவாலாக உள்ளது. அதேநேரம், தேசிய பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதா அல்லது ஓரளவு தளர்த்துவதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்திய - சீன வர்த்தக உறவு மீண்டும் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது. ஆனால், எல்லை பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படாத நிலையில் இந்த முடிவு அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சீர்திருத்த நடவடிக்கைகள் அதிக வீரியத்துடன் தொடரும்!! மோடி போட்ட ட்வீட்! மறைந்திருக்கும் உண்மைகள்!