புது டெல்லி: கடந்த 11 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சியில் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் எவ்வித பாகுபாடும் இன்றி நாட்டின் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட விரிவான அறிக்கையில் பிரதமர் மோடி கூறியதாவது: “கடந்த 11 ஆண்டுகளில் என்டிஏ அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடு இன்றி சென்றடைந்துள்ளன. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வருமான வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “2வது முறையாக காந்தியை படுகொலை செய்துவிட்டார்கள்...” - மத்திய அரசை வெளுத்து வாங்கிய ப.சிதம்பரம்...!
ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிப்பு இல்லை. இதனால் நடுத்தர வர்க்க குடும்பங்கள் தங்களது சம்பாத்தியத்தில் அதிகப் பணத்தை சேமிக்க முடிகிறது. இது அவர்களது நிதி நிலையை வலுப்படுத்தி, செலவு செய்யும் திறனை அதிகரிக்கச் செய்கிறது” என்றார்.

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் குறித்து பேசிய பிரதமர், “ஜிஎஸ்டி அமலாக்கம் வணிகம் செய்வதை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கை வணிகர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. இதன் விளைவாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது விற்பனை பெருமளவில் உயர்ந்துள்ளது. வணிகர்களும் நுகர்வோரும் இதன் பலனை உணர்ந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
தொழிலாளர் நலன் குறித்து பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “நாட்டில் இருந்த 29 தொழிலாளர் நலச் சட்டங்கள் நான்கு எளிய சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படுகின்றன. அவர்களுக்கு வழங்கப்படும் பலன்களும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகின்றன. இது தொழிலாளர்களுக்கு எளிமையான சூழலை உருவாக்கி, அவர்களது நலனை மேம்படுத்துகிறது” என்றார்.
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வேகத்துடனும் வீரியத்துடனும் தொடரும் என்று உறுதி அளித்த பிரதமர், “மக்களின் வாழ்வை மேம்படுத்துவதே அரசின் முதன்மையான இலக்கு. இந்தச் சீர்திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தி, இந்தியாவை உலகின் வலுவான பொருளாதார நாடாக மாற்ற உதவும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
என்டிஏ அரசின் இந்தச் சாதனைகள் நடுத்தர வர்க்கம், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. வரி சலுகைகளும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களும் பண்டிகை கால விற்பனையை உயர்த்தியது பொருளாதார மீட்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஏபிஜே அப்துல் கலால் பெயரில் ஏவுகணை! 2.5 டன் அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் அரக்கன்!! இந்தியா மாஸ்!