பீஹார் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்றால், நிதிஷ் குமாரை மீண்டும் முதல்வராக்குவது குறித்து தேர்தல் முடிவுகளுக்குப் பின் முடிவு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். "நிதிஷ் தலைமையில் போட்டியிடுகிறோம்; வெற்றிக்குப் பின் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் உட்கார்ந்து முடிவு செய்வோம்" என்று அவர் கூறினார். இது பீஹார் அரசியலில் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் 243 தொகுதிகளுக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். நவம்பர் 14-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக தலைமையிலான NDA, தற்போதைய ஆட்சியைத் தக்கவைக்க தீவிரம் காட்டுகிறது. அமித் ஷா, இந்தியா டுடேவுடன் அளித்த பேட்டியில், "நாங்கள் நிதிஷ் குமாரின் தலைமையில் போட்டியிடுகிறோம். தேர்தலுக்குப் பின் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்து முடிவு செய்வோம்" என்றார்.
அமித் ஷா, நிதிஷ் குமாரைப் பற்றி பாராட்டினார்: "அவர் சோசலிஸ்ட் தலைவர்; அவரது அரசியல் வாழ்க்கை காங்கிரஸை எதிர்ப்பதன் மூலம் உருவானது. JP இயக்கத்திலிருந்து அவர் காங்கிரஸுக்கு எதிராகப் போராடினார். காங்கிரஸுடன் 2.5 ஆண்டுகளுக்கு மட்டுமே இருந்தார். BJP-வும், பீஹார் மக்களும் அவரை நம்புகிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: பீகார் தேர்தலில் போட்டியில்லை! ஜகா வாங்கிய பிரசாந்த் கிஷோர்! கலாய்த்து தள்ளும் பாஜக!

2020 தேர்தலுக்குப் பின், BJP அதிக இடங்களைப் பெற்றபோதும், நிதிஷின் மரியாதை, மூப்புத்தன்மை காரணமாக அவரையே முதல்வராக்கியதாக ஷா நினைவூட்டினார்.
அமித் ஷா, "நான் யாரென்று சொல்லி யாரையும் முதல்வராக்க முடியாது. அனைத்து கூட்டணிக் கட்சிகளும் முடிவு செய்யும்" எனவும் தெரிவித்தார். NDAவின் முந்தைய சாதனைகளை மீறி பெரும் வெற்றி பெறும் என அவர் உறுதியளித்தார்.
அமித் ஷா, RJD தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை விமர்சித்தார்: "பீஹார் மக்கள் லாலு ஆட்சியைக் கண்டுள்ளனர்; அது மீண்டும் வருவதை விரும்ப மாட்டார்கள்" என்றார். காங்கிரஸை "மற்றவர்களை சிறியதாக நினைத்து சிறுபிள்ளை தனமான சிந்தனை செய்வதால் சிறிய கட்சியாகிவிட்டது. இந்த அகங்காரம் பீஹாரில் இருந்து மேற்கு வங்கம் வரை காங்கிரஸை அழித்துவிட்டது" எனக் கடுமையாகத் தாக்கினார்.
NDA, JD(U), BJP, LJP(RV) ஆகிய கூட்டணியில் போட்டியிடுகிறது. 2020-ல் NDA 125 இடங்களில் வென்றது; JD(U) 43, BJP 74. இப்போது NDA 243-ல் 200+ இடங்கள் வெல்லும் என நிதிஷ் குமார் உறுதி. அமித் ஷா, பாட்னாவில் மூன்று நாள் பயணத்தில் NDAவின் தேர்தல் உத்தியை வலுப்படுத்துகிறார்.
இந்த அறிவிப்பு, NDA கூட்டணியில் நிதிஷ் குமாரின் பங்கு குறித்த சந்தேகங்களை தீர்க்கிறது. தேர்தல் முடிவுகள் NDAவுக்கு சாதகமாக இருந்தால், முதல்வர் பதவி குறித்த புது விவாதம் தொடங்கும்.
இதையும் படிங்க: பீகார்!! தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி! கையை பிசையும் தேசிய கட்சிகள்!