கோவை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலர் பி.எல். சந்தோஷ், தமிழக பா.ஜ.க.வினர் கட்சியின் முடிவுகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் முழுமையாகக் கட்டுப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் உள்ள பா.ஜ.க. மாநில அலுவலகத்தில் இரண்டாவது நாளாக நேற்று மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தேசிய அமைப்புப் பொதுச் செயலர் பி.எல். சந்தோஷ் தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் எச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட 27 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு வேட்பாளரிடமும் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சந்தோஷ் நேரடியாகக் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி விவகாரங்கள்ல மூக்கை நுழைக்காதீங்க! பாஜகவினருக்கு கடிவாளம் போட்ட டெல்லி தலைமை!!

தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பா.ஜ.க. சார்பில் பங்கேற்பவர்கள் மக்களிடம் நேர்மறையான செய்திகளை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கட்சியின் முன்னேற்றத்துக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
தமிழக அரசியல் சூழலை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும் சந்தோஷ் தெளிவாகக் கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “கட்சி நிர்வாகிகள் மாற்றம், எதிர்கால நடவடிக்கைகள், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வழிகள் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது” என்றனர்.
சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் பெற்ற தோல்வியை பா.ஜ.க. தீவிரமாக மதிப்பீடு செய்து, அடுத்த கட்ட உத்திகளை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: விஜய்யின் தவெகவுக்கு தாவும் பாஜக இளைஞர்கள்! கட்சியை காக்க மீண்டும் தலைமை ஏற்கிறார் அண்ணாமலை?!