புதுடில்லி: அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்.) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலக நாடுகளில் மத சுதந்திர நிலையை கண்காணிக்கும் இந்த சுதந்திர அமைப்பு, தனது ஆண்டறிக்கையில் இந்தியாவை 'குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு' என்ற பட்டியலில் ஏழாவது ஆண்டாக இணைத்துள்ளது.
இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் மீது கடும் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கியர்கள் மீதான தாக்குதல்களுக்கும் இந்தியாவின் உளவு அமைப்பான ரா (RAW) மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) ஆகியவற்றுக்கு தொடர்பு இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..!! கட்சி தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

இதன் அடிப்படையில், இந்த அமைப்புகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கவும், அவற்றைச் சேர்ந்தவர்களின் சொத்துகளை முடக்கவும், அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு ஆயுத விற்பனையை நிறுத்தவும் அமெரிக்க அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியானதும், இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "இது உள்நோக்கம் கொண்டது, பாரபட்சமானது. இந்தியாவின் இறையாண்மையை தவறாக சித்தரிக்கும் முயற்சி. அமெரிக்காவில் ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல்களையும் சகிப்புத்தன்மையின்மையையும் அவர்கள் கவனிக்க வேண்டும்" என்று அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
பாஜகவும் இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரித்துள்ளது. கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும் எம்.பி.யுமான சம்பித் பத்ரா கூறுகையில், "இந்த அறிக்கை நம்பகத்தன்மையற்ற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. எந்த வெளிநாட்டு ஆணையமும் இந்தியாவுக்கு நிபந்தனைகள் விதிக்க முடியாது. காங்கிரஸ் இதை ஆதரிப்பது நாட்டை களங்கப்படுத்தும் முயற்சி" என்றார்.
இந்த சர்ச்சை அமெரிக்கா-இந்தியா உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் உலக அரங்கில் விவாதமாகியுள்ளன.
இதையும் படிங்க: 'பங்கர் பஸ்டர்' குண்டுகள்!! ஈரான் ஏவுகணை தளம் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்!