ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மேலும் இரு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்திய கப்பல் ஊழியர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றத்தால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு மீண்டும் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் தொடர்பான இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இந்த வழியாக செல்லும் அனைத்து கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையும் படிங்க: ஈரானின் தொடர் தாக்குதலால் பலத்த சேதம்!! மூடப்பட்டது சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!
இந்நிலையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த ஒரு டேங்கர் கப்பல் மீது ஈரான் வெடிகுண்டுகள் நிரப்பிய ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் கப்பலின் பல பகுதிகள் சேதமடைந்தன.

தாக்குதலில் 3 இந்தியர்கள் உடனடியாக உயிரிழந்தனர். கப்பலின் கேப்டன் அஷிஷ்குமார் உள்பட இரு இந்தியர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. கப்பல் ஊழியர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, காணாமல் போன அஷிஷ்குமார் உள்பட இருவரும் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 5 இந்தியர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். கப்பலில் இருந்த மற்ற ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள துறைமுகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் டேங்கர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்தை மிகுந்த வேதனையுடன் கண்டித்துள்ளது. மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் உயர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
தேவைப்படும் உதவிக்கு 24 மணி நேர உதவி எண்கள் (1800-11-8797 மற்றும் +91-11-23012113) அறிவிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் பயணத்திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறும், அத்தியாவசிய பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் உலக எண்ணெய் சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடல் தொடர்வதால் கப்பல்கள் நூற்றுக்கணக்கில் நங்கூரமிட்டு காத்திருக்கின்றன. இதனால் இந்தியா உட்பட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல்!! சிக்கித்தவிக்கும் கப்பல்! பெட்ரோல், டீசல் விலை உயரும்?!