காவிரி நதிநீர் பிரச்சினையில் சமரச தீர்வு காணும் நோக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாக இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை திட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், நான்கு மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பைத் தொடர்ந்து, காவிரி நதிநீரை சுமுகமாகப் பகிர்ந்துகொள்ளும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் (Cauvery Management Authority - CMA) மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு (Cauvery Water Regulation Committee - CWRC) ஆகியவை உருவாக்கப்பட்டன. இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி, நீர் பங்கீடு, விவசாயத் தேவை, குடிநீர் தேவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பரிசீலித்து வருகின்றன. இதுவரை 50 கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், 51-வது கூட்டம் வரும் 28-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், முக்கியத்துவம் கருதி முன்கூட்டியே இன்று கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் கூட்டம் குறித்த தகவல் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவும், காணொலி மூலமாகவும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உயர் அதிகாரிகள், நீர் வளத்துறை செயலர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி! மே மாதத்திற்காக 2.5 டி.எம்.சி தண்ணீரை திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு!

காவிரி பிரச்சினை நீண்டகாலமாக இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் உள்ள மேகதாது அணை திட்டத்துக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தக் கூட்டத்தில் அத்திட்டம் குறித்த விரிவான விவாதம் நடைபெறும் எனக் கருதப்படுகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் கீழ்ப்பகுதியில் உள்ள டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும் என தமிழ்நாடு வாதிடுகிறது. அதேபோல், குடிநீர் மற்றும் பவர் தேவைக்காக அணை அவசியம் என கர்நாடகா வலியுறுத்தி வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் நீர் வெளியீட்டை அறிவியல் பூர்வமாக கண்காணித்து, பங்கீட்டை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதுவரையிலான கூட்டங்களில் பல சமரச முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. இருப்பினும், பருவமழை அளவு, நீர் இருப்பு உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து அவ்வப்போது பிரச்சினைகள் எழுகின்றன.
இன்றைய கூட்டத்தில் என்ன முடிவுகள் எட்டப்படுகின்றன என்பதை நான்கு மாநில மக்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். குறிப்பாக, வரும் பருவ விவசாயத்துக்கு நீர் பங்கீடு எப்படி இருக்கும் என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பான விரிவான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ..!! பிரதமர் மோடியுடன் முக்கிய மீட்டிங்..!!