இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, முன்னதாக அறிவிக்கப்பட்டபடி இன்று காந்தி ஜெயந்தி தினத்தில் மும்பை தாதரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாஜி பூங்கா பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் 'CJP 2.0' என்ற பெயரில் மாபெரும் அறப்போராட்டம் எழுச்சியுடன் தொடங்கியது.
இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு தழுவிய அளவில் முன்னெடுத்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கை மூலம் கோடிக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் தலைமை தன்னிச்சையாகவும் ஆளும் தரப்பின் ஏஜென்டாகவும் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, சி.ஜே.பி கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜீத் திப்கே விடுத்த நாடு தழுவிய போராட்ட அழைப்பை ஏற்று, இன்று காலை முதலே மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயக ஆர்வலர்கள் மும்பை சிவாஜி பூங்கா பகுதியில் திரளத் தொடங்கினர்.
இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு... அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய போராட்டம்..! CJP தலைவர் அபிஜித் தீப்கே அறிவிப்பு.!!

கையில் பதாகைகள் மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு முழக்கங்களுடன் அணிவகுத்த போராட்டக்காரர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும், மக்களின் வாக்குரிமையைப் பறிக்காதே, தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சித் தன்மையைப் பாதுகாக்க வேண்டும் எனப் பெருமுழக்கம் எழுப்பினர்.
போராட்டக் களத்தில் பேசிய சி.ஜே.பி ஒருங்கிணைப்பாளர்கள், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படத் தவறிவிட்டது; மூன்று ஆணையர்கள் கொண்ட அமைப்பில் ஜனநாயக நெறிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டுத் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன; இந்நிலை தொடர்ந்தால் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டுவிடும்; எனவே ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை இந்தப் போராட்டம் ஓயாது; மும்பையைத் தொடர்ந்து நாட்டின் பிற பெருநகரங்களிலும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று ஆவேசமாகத் தெரிவித்தனர்.
சிவாஜி பூங்கா பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து திரண்டு வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க மும்பை பெருநகரக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!