காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு, மூன்று நாட்களுக்கு முன்னரே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்போவது தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், தீவிரவாத தாக்குதல் நடக்கப்போவது மத்திய அரசுக்கு முன்பே தெரியும். குறிப்பாக மூன்று நாட்களுக்கு முன்பாகவே உளவுத்துறை பிரதமர் மோடிக்கு தாக்குதல் தொடர்பான தகவலை கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் காஷ்மீருக்கு செல்ல திட்டமிட்டிருந்த அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: எனது அலுவலகத்தையே தரேன்; போர் வேண்டாம்... ஐநா பொதுச்செயலாளர் அட்வைஸ்!!

பிரதமர் மோடி அவருடைய உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை. எதற்காக காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தாமல் விட்டீர்கள். எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவ படை, ராணுவம் இருக்கிறது. இவற்றையெல்லாம் உஷார் படுத்தி பாதுகாப்பை ஏன் உறுதி செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பினார். மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா, காங்கிரஸிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பயங்கரவாதத் தாக்குதலுக்கு எப்போதுமே பாதுகாப்பு குறைபாடு என்பது பிரதான காரணம் தான். ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு முன்பே பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்படவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் மோடியின் ரத்து செய்யப்பட்டதாகக் கூறுவது ஊகத்தின் அடிபடையிலானது என்று தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைக்கு நாம் தயாராகி வரும் நேரத்தில் கார்கே இப்படி பேசுவது அவர் அற்ப அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதைக் காட்டுகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரதமரை அவர் விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெரிய கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியில் மூத்த தலைவரிடமிருந்து இதைவிட ஒரு பொறுப்பற்ற கருத்து வரமுடியாது. பாதுகாப்பு ஒத்திகையில் மக்கள் அனைவரும் நாட்டுடனும் அரசுடனும் உறுதுணையாக இருக்கும்போது, இதுபோன்ற கருத்துகளை எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது மிகுந்த மனவேதனையை உண்டாக்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இதை சொன்னால் மதவாதமா? பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் கேள்வி!!