காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சோனியா காந்தி. 78 வயதான இவர் ஏற்கனவே வயது மூப்பு காரணமாக அவர் அரசியலில் இருந்து சற்று விலகியே இருக்கிறார். இதன் காரணமாகவே கடந்த லோக்சபா தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இப்போது ராஜ்யசபா எம்பியாகவே இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி திடீரென சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!
அங்கு அவர் இரைப்பைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணித்து வந்தனர். சோனியா காந்தி உடல்நலம் சீராகி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வயிறு பிரச்சனை தொடர்பாக சிகிச்சை அளிப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கங்காராம் மருத்துவமனை தலைவர் அஜய் சுவரூப் கூறுகையில், "சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தகுந்த சிகிச்சையை வழங்கினர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும் வெளிநோயாளி என்ற அடிப்படையில் சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில் மட்டும் சோனியா காந்தி இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜூன் 7ம் தேதி, தனிப்பட்ட பயணமாக தனது மகள் பிரியங்கா காந்தியுடன் சோனியா காந்தி சிம்லாவுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் சோர்வாக உணரவே உடனடியாக அவர் இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சோனியா காந்திக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும், அவர் வழக்கமான பரிசோதனைக்குதான் மருத்துவமனைக்கு வந்ததாகவும் அதை முடித்துவிட்டு கிளம்பிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதத்திலும் வயிறு வலி காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!