தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ள சூழலில், ஏர் ப்யூரிஃபையர் (Air Purifier) சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார வட மாநிலங்களில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து, மக்கள் சுவாசிக்கக் கூடச் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், வீடுகளுக்குள் காற்றைச் சுத்திகரிக்கப் பயன்படும் ‘ஏர் ப்யூரிஃபையர்’ சாதனங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த இயந்திரங்கள் மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால், நடுத்தர மக்களால் இவற்றை வாங்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், "மக்களுக்குச் சுத்தமான காற்றை வழங்க அதிகாரிகளால் முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் அந்த இயந்திரங்கள் மீதான வரியையாவது குறைக்க வேண்டும்" எனத் தனது அதிருப்தியைப் பதிவு செய்தது.

நீதிமன்றத்தின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, டெல்லியில் நிலவும் காற்று மாசைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், டெல்லியின் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் முதல்வர் தனது கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா? தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அறிவிப்பு!
ஏற்கனவே, ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஏர் ப்யூரிஃபையர் மீதான வரியை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நீதிமன்றமே இதில் தலையிட்டுள்ளதால், அடுத்து நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான சாதகமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மாசுப் பிரச்சனை டெல்லியில் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: “அடிமை என்று சொல்பவர்கள் கண்ணாடியைப் பார்க்கட்டும்!” - முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி!