காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன.

பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாத தளங்களில் தாக்குதல் நடத்த, இந்தியா அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகள் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்திவரும் இந்திய ராணுவம், அதற்காக அதிக துல்லியமான ஆயுதங்களின் தொகுப்பை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. தரைவழி, வான்வழி, கடல்வழி என முப்படைகளையும் பயன்படுத்தி, இந்தியா தனது ராணுவ பலத்தை பறைசாற்றியுள்ளது.
இதையும் படிங்க: என் குடும்பமே போச்சு.. நானும் போயிருக்கனும்; கதறும் மசூத் அசார்!!

இந்தியாவின் இந்த தாக்குதலில் SCALP ஏவுகணை முக்கியமான ஒரு ஏவுகணையாக கருதப்படுவது, புயலின் நிழல் என அழைக்கப்படும் ஸ்கால்ப் ஏவுகணை, 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமான தாக்கி அழிக்கும் திறன்கொண்டது. ஸ்கால்ப் என்பது நீண்ட தூர ஆழமான தாக்குதல்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வான்வழி ஏவுகணை ஆகும். இது உலகெங்கிலும் உள்ள பாதுகாப்புப் படைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது இதன் சிறப்பம்சமே, இரவிலும், அனைத்து விதமான வானிலையிலும் இயக்கப்படும் திறன் கொண்டது என்பதே ஆகும். ஸ்கால்ப் ஏவுகணையை கொண்டு 450 கி.மீ., தூரம் வரை தாக்குதல் தொடுக்கலாம். இதன் ஏவுகணையின் துல்லியத்தன்மைக்கு முதன்மையான காரணம் அதன் மேம்பட்ட வழிசெலுத்தல் அமைப்பாகும்.

இது INS, GPS மற்றும் நிலப்பரப்பு குறிப்புகளை பயன்படுத்தி இலக்குகளை துல்லியமாக தாக்குகிறது. இந்த ஏவுகணை ஐரோப்பிய கூட்டமைப்பான MBDA மூலம் தயாரிக்கப்படுகிறது. தாக்குதலில் இருந்து தப்பிக்க எதிரிகள் உருவாக்கிய மிகவும் சாதுரியமான பதுங்கு குழிகள், வெடிபொருள் கிடங்குகள் உள்ளிட்டவற்றை ஊடுருவிச் செல்வதற்கு இது ஒரு சிறந்த ஆயுதமாகக் கருதப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு முதல்முறையாக ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை தாக்க இதே ஏவுகணையைதான் உக்ரைன் பயன்படுத்தியது. 450 கிலோ எடையுள்ள வெடிமருந்தை சுமந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணை, ஜெட் விமானத்தில் இருந்து ஏவப்படும்போது தாழ்வாகப் பறக்கும் என்பதால் இதனை கண்டறிவதும் கடினம். ரேடாரிலும் சிக்காது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பயங்கரவாத முகாம்களின் படங்கள் வெளியீடு..! அம்பலமானது பஹல்காம் தாக்குதலில் பாக். பங்கு..!