சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 95 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் தொடர்ந்து பக்தர்களுடைய வருகை அதிகரித்து காணப்படுவதை அடுத்து தேவசம் போர்டு மீண்டும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த 15 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது அன்று முதல் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுடைய எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனத்திற்காக வந்த காரணத்தினால் பம்பை, மரகூட்டம், சரங்கொத்தி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் பலர் கூட்ட நெரிசல் காரணமாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் தடுப்புகள் மீது ஏறி வரிசையில் முண்டியடித்து கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது. சபரிமலையில் கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதி வருவதால் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை திறந்து காட்டிய கேரள போலீஸ்... சபரிமலையில் தெலுங்கு பத்தர்களுக்கு நேர்ந்த அவமானம்... கொந்தளிந்த ஆந்திர எம்.எல்.ஏ...!
இதைத்தொடர்ந்து தேவசம்போர்டு சபரிமலை வரும் பக்தர்களுடைய எண்ணிக்கையை ஒரு லட்சத்திற்குள் நிறுத்துவதற்கு முடிவு செய்தது. இதன்படி 70 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாகவும் 20 ஆயிரம் பேர் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் அனுமதி வழங்க முதற்கட்டமாக முடிவெடுக்கப்பட்டது. கூடுதலாக வரும் பக்தர்களுக்கு மறு நாளைக்கு தரிசனத்திற்கு ஸ்பாட் புக்கிங் செய்வதற்கும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் கூட்டநெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஸ்பார்ட் புக்கிங் எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்க தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது.
தற்போது சபரிமலை வரக்கூடிய பக்தர்கள் கண்டிப்பாக ஆன்லைன் முன்பதிவு செய்து வரவேண்டும் என்றும், ஒவ்வொரு பக்தருக்கும் ஒதுக்கப்பட்ட நாளில் நேரத்தில் தரிசனம் செய்வதற்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி வராதவர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
தினமும் ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்து அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 95 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்த நிலையில் 45 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்து சரியான நாளில் சரியான நேரத்திற்கு வந்த பக்தர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சபரிமலை சன்னிதானத்தில் கேரளா பாரம்பரிய உணவுகளை அன்னதானமாக வழங்க முடிவு செய்த நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் வரக்கூடிய ஐயப்ப பக்தர்களுக்கு சாப்பாடு சாம்பார் பொரியல் பாயாசம் அப்பளம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கூட்டம்... ஐயப்ப பக்தர்களின் உயிர் காக்க தேவசம் போர்டு எடுத்த அதிரடி முடிவு...!