கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் தான் நிரந்தரமாக இருக்க முடியாது என்று துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் திடீரென அறிவித்துள்ளார். இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், “நான் இங்கு நிரந்தரமல்ல… மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால் கவலைப்படாதீர்கள், நான் தலைமைப் பொறுப்பில் இருப்பேன், முன்னணியில் இருப்பேன்” என்று ஆதரவாளர்களை ஆறுதல்படுத்தினார்.
நேற்று கர்நாடகாவில் இந்திரா காந்தியின் 107வது பிறந்தநாளை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் டி.கே.சிவகுமார் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “நான் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. கர்நாடகாவில் குறைந்தது 100 காங்கிரஸ் அலுவலகங்களையாவது கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. டெல்லி மேலிடம் சில எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கேட்டுள்ளது. ஆர்வம் காட்டாதவர்களின் பட்டியலை அனுப்புகிறேன். சிலர் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்கள். அவர்களுக்கு டெல்லி ஒரு பதிலைச் சொல்லும்” என்று பேசினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஆதரவாளர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். அவர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார் மேலும் தெளிவுபடுத்தினார்: “நான் இங்கு நிரந்தரமாக இருக்க முடியாது. நான் உங்களுக்கெல்லாம் சொல்கிறேன். இந்த மார்ச் மாதத்தில் நான் 6 ஆண்டுகளை நிறைவு செய்துவிடுவேன். மற்றவர்கள் வருவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: மீண்டு வந்த தவெக... மீண்டும் மக்கள் சந்திப்பு... சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்க விஜய் திட்டம்..!
ஆனால் கவலைப்படாதீர்கள், நான் தலைமைப் பொறுப்பில் இருப்பேன். நான் முன்னணியில் இருப்பேன். நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல. கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். நம்பிக்கையை இழக்காதீர்கள். நாம் கடுமையாக உழைத்தால் அதிகாரம் நிச்சயம் கிடைக்கும்.”
2020 மே மாதம் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட டி.கே.சிவகுமார், 2023-ல் துணை முதலமைச்சரான பிறகும் இப்பதவியை வகித்து வருகிறார். அப்போது பதவியை விடுவிக்க அவர் விரும்பியபோது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதால்தான் தொடர்ந்து பொறுப்பில் இருந்து வருகிறார்.

தற்போது அவர் தானாக முன்வந்து “நான் நிரந்தரமல்ல” என்று கூறியது கட்சிக்குள்ளும் வெளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வொக்கலிகா சமூகத்தின் மிகப் பெரிய தலைவராக விளங்கும் டி.கே.சிவகுமார், முதலமைச்சர் சித்தராமையாவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது முதலமைச்சர் பதவி தனக்குத்தான் என்று உறுதியாக நம்பிய அவர், டெல்லி மேலிடத்தால் சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டதால் மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த அறிவிப்பு வந்திருப்பதாக கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் “அண்ணா எங்களை விட்டு எங்கும் போகமாட்டார், எப்போதும் முன்னணியில் இருப்பார்” என்று உறுதியளித்தாலும், அவரது இந்தப் பேச்சு கர்நாடக காங்கிரஸில் புதிய தலைமை மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிருப்தியில் தனிக்கட்சி ஆரம்பித்த மல்லை சத்யா... பெயர் என்ன தெரியுமா?