நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. கனிமொழி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கனிமொழி எம்பி கூறியதாவது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பது சாதாரண சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் உணவகங்கள் நடத்துபவர்கள் தொடர்ச்சியாகப் பெரும் நஷ்டத்தையும், கடுமையான பொருளாதாரச் சிக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்தும் அபாயகரமான நிலையை ஏற்படுத்தி, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் முடக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!
எரிபொருள் சிக்கனம் தொடர்பாக டெல்லி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் பிரதமரின் அறிவுறுத்தல்கள் குறித்துப் பேசிய அவர் பிரதமர் போன்ற பொறுப்பு மிக்க இடங்களில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு வெறும் அறிவுரைகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியைத் தீர்க்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பது குறித்த எந்தவொரு நம்பிக்கையூட்டும் விஷயத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை எனச் சாடினார்.

அச்சத்தை உருவாக்கும் போக்கு: மக்களைப் பதற்றத்தில் ஆழ்த்துவதையும், மக்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்களே தவிர, அதற்கான தீர்வைக் கூறாமல் மக்களிடையே அச்சத்தையும் கேள்விக்குறியையும் மட்டுமே மத்திய அரசு உருவாக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசின் செயல்பாடுகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர்கள் இப்போதுதானே பொறுப்பேற்று இருக்கிறார்கள் என்று மிகவும் சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு கனிமொழி எம்பி கடந்து சென்றார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தனது உட்கட்சிக் கூட்டங்களை நடத்தி வரும் வேளையில், நெல்லையில் கனிமொழி எம்பி மத்திய அரசுக்கு எதிராக முன்வைத்துள்ள இந்த விமர்சனங்கள் அரசியல் அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: தங்கம் வாங்காதீங்க... நாட்டு மக்களுக்கு மோடி சொன்ன முக்கிய செய்தி... பின்னணியில் உள்ள காரணம் என்ன?