அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி, இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவரணி அறிவித்திருந்த நிலையில், திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மனிதவள மேலாண்மை அமைச்சர் டி. சரத்குமார் ஐ.பி.எல் (IPL) கிரிக்கெட் போட்டியின்போது போதைப்பொருள் போன்ற ஒன்றை பயன்படுத்துவது போல பரவிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பரவிய அந்த பழைய வீடியோவில், அமைச்சர் சரத்குமார் தனது செல்போன் திரையில் வெள்ளை நிற தூள் போன்ற பொருளை ஏ.டி.எம் (ATM) கார்டு மற்றும் ரூ.500 நோட்டு உதவியாகக் கொண்டு பொடிப்பது போல காட்சிகள் இருந்தன.அமைச்சரே போதைப்பொருள் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இணையத்தில் வேகமாகப் பரவியது.
இதனையடுத்து, அந்த வீடியோ சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல் போட்டி நடைபெற்றபோது எடுக்கப்பட்டது.அப்போது தனது ஒன்றரை வயதுக் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், குழந்தை மாத்திரையை முழுங்க மறுத்ததால் அதனை பொடியாக்கி தண்ணீரில் கலக்கிக் கொடுப்பதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.போதைப்பொருளைப் பயன்படுத்தவில்லை என்றும், அதுகுறித்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் தனது குடும்பத்தினருடன் அவர் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் சந்திக்க மறுப்பு! கட்சி தாவிய அதிமுக மாஜிக்கள் ஏமாற்றம்!
பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ வெளியானதாகக் குற்றஞ்சாட்டி, அமைச்சர் டி. சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக மாணவரணி வலியுறுத்தியது. ளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். ஆனால், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர் டி. சரத்குமாரின் செயல்பாடு அதற்கு முரணாக இருப்பதாக திமுக மாணவரணி குற்றம்சாட்டியுள்ளது.
குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரான டி. சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், அதற்கு அமைச்சர் அளித்த விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை முன்னிறுத்தி அரசியல் செய்வது போன்ற அணுகுமுறையையே அவர் கடைப்பிடித்ததாகவும் திமுக மாணவரணி விமர்சித்திருந்தது.
அமைச்சர் உண்மையில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என்பது குறித்து விவாதிப்பதை விட, பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறும் வீடியோ வெளியிடப்பட்டதே ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் மாணவரணி கண்டித்தது. இவ்வாறு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் செயல்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு ஊக்குவிக்கும் என்பதால், அமைச்சர் டி. சரத்குமாரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் கூறப்பட்டது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனுக்கு உகந்ததல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று காலை சென்னையில் அமைச்சர் சரத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட ஒன்று கூடிய திமுகவினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை முறையான அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி போலீசார், கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
மேலும் போராட்டத்தின் போது ஒலி பெருக்கி அமைக்கவும், மேடை போடவும் அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்ததோடு, அவற்றை அகற்ற முயன்றனர். இதனால் திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. இந்நிலையில் பதற்றமான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக போலீசார் திமுகவினரை குண்டுக்கட்டாய் தூக்கி அங்கிருந்து கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க: பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!