நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினங்கள்;தலைநகர் டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து, உச்சநீதிமன்றம் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், "நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினங்கள்; அவை கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட வேண்டியவை அல்ல" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் நகரில் உள்ள அனைத்து தெருநாய்களையும் சில வாரங்களில் காப்பகங்களில் அடைப்பது தெருநாய்களை கொடூரமான மனிதாபிமானமற்ற முறையில் நடத்த வழிவகுக்கும். தெருநாய்களை அடைக்க போதிய காப்பகங்கள் இல்லை. நகர்ப்புற சூழலில் உள்ள தெருநாய்கள் மோசமான முறையில் நடத்துதல் மற்றும் மிருகத்தனத்திற்கு ஆளாகின்றன. இந்த விவகாரத்தை கையாள சிறந்த வழிகள் உள்ளன. தெருநாய்களை கவனித்து பாதுகாக்க மனிதாபிமான வழிகளை காணலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆதார் குடியுரிமைச் சான்று இல்லை.. தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் சப்போர்ட்..!!
உச்சநீதிமன்றம், டெல்லி அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எட்டு வாரங்களுக்குள் தெருநாய்களை காப்பகங்களில் அடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டது. மேலும், கருத்தடை செய்யப்பட்ட நாய்களை பொது இடங்களில் விடுவிக்க வேண்டாம் என்றும், காப்பகங்களில் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். இந்த உத்தரவு, தெருநாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் ரேபிஸ் நோய் பரவல் குறித்த புகார்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டது.
மேலும் நாய்க்கடி புகார்களைப் பதிவு செய்ய ஒரு வாரத்திற்குள் தொலைபேசி உதவி எண்ணை அமைக்க வேண்டும் என்றும், புகார்கள் மீது நான்கு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெருநாய்களை கருத்தடை செய்து மீண்டும் விடுவிப்பதால் பிரச்சினை தீராது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், நகர்ப்பகுதிகளில் ஒரு தெருநாய் கூட இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியது. தெருநாய்களின் தாக்குதலால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது.

பிரியங்கா காந்தியின் விமர்சனம், விலங்கு நல ஆர்வலர்களின் கருத்துகளுடன் ஒத்துப்போகிறது. தெருநாய்களை காப்பகங்களில் அடைப்பது, அவற்றின் இயல்பான வாழ்க்கையை பாதிக்கும் என்றும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே சமநிலையை உருவாக்குவதற்கு மாற்று வழிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கம் கொண்டிருந்தாலும், விலங்கு உரிமைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரியங்கா வலியுறுத்தினார்.
இந்த உத்தரவுக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போன்ற முறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தெருநாய்களை பிடிக்க 8 வாரம் தான் டைம்.. அதிரடி ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட்..!!