கேரள மாநிலத்தில் இரட்டைச் சகோதரர்கள், இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்தத் திருமண நிகழ்வையே இரட்டைப் பாதிரியார்கள் நடத்தி வைத்து, இரட்டைச் சிறுவர்கள் பலிபீட உதவியாளர்களாகச் செயல்பட்ட அரிய மற்றும் சுவாரஸ்யமான திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக உலகில் இரட்டையர்கள் என்றாலே அனைவராலும் மிகவும் அரிதாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கப்படுவது வழக்கம். ஆனால், கேரளாவில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் முற்றிலும் இரட்டையர்களாலேயே சூழப்பட்ட ஒரு விசித்திரத் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் சங்கனாச்சேரி வெட்டுபரம்பிலைச் சேர்ந்த குஞ்சுமோன் தாமஸ் - ஜோமோல் தம்பதியினரின் இரட்டை மகன்களான அகில் மற்றும் நிகில் ஆகிய இருவரும் வணிகக் கப்பலில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல, பத்தனம்திட்டா மாவட்டம் குளத்தூர் கும்புலுவேலியைச் சேர்ந்த டோமிச்சன் - மேரிக்குட்டி தம்பதியினரின் இரட்டை மகள்களான மகி மற்றும் மரியா ஆகிய இருவரும் தகவல் தொழில்நுட்பத் (IT) துறையில் பணியாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: "சாலையில் வழுக்கிச் சென்று கவிழ்ந்த பேருந்து!" - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சங்கனாச்சேரி மெட்ரோபாலிட்டன் தேவாலயத்தில் அகில் - மகி ஜோடிக்கும், நிகில் - மரியா ஜோடிக்கும் ஒரே மேடையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தின் உச்சக்கட்டச் சுவாரஸ்யமாக, காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தின் இரட்டைப் பாதிரியார்களான அருட்தந்தை ஆன்டோ பேழும்கட்டில் மற்றும் அருட்தந்தை அஜோ பேழும்கட்டில் (பென்டோ, பேஜோ) ஆகியோர் தலைமை தாங்கி இந்தத் திருமணச் சடங்குகளை நடத்தி வைத்தனர். மேலும், இந்தத் திருமணத்தில் பாலாவைச் சேர்ந்த இரட்டைச் சிறுவர்களான ஜெரோன் ஜேம்ஸ் மற்றும் ஜோஹன் ஜேம்ஸ் ஆகியோர் தேவாலய பலிபீட உதவியாளர்களாகப் பணியாற்றி அசத்தினர்.
இந்த விசித்திரத் திருமணம் குறித்துப் பூரிப்புடன் பேசிய மணப்பெண்கள், சிறுவயதிலிருந்தே இரட்டைக் குழந்தைகள் சூழத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எங்கள் கனவாக இருந்தது. எங்கள் பெற்றோரும் குடும்பத்தினரும் கூட அதைத் தான் விரும்பினார்கள். அந்த அரிய கனவை இயேசு கிறிஸ்து இன்று நிகழ்த்திக் காட்டியுள்ளார் எனக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதேபோல, இரட்டைக் குழந்தைகளின் திருமணத்தை நாங்கள் இரட்டையர்களாக இருந்து நடத்தி வைத்தது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அழகான அனுபவம் எனப் பாதிரியார்களும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!