ரூ.5,000 கோடி அளவுக்கு கேரளாவில் நிதி மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான பிரேம் குமாரை, கோழிக்கோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கைது செய்தனர். பின்னர் அவரைக் கேரளாவுக்கு அழைத்துச் சென்ற நிலையில், நீதிமன்றம் மூலம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
பிரேம் குமார் மீது நிதி முறைகேடு மற்றும் அனுமதியற்ற வணிக நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு புகார்கள் எழுந்திருந்தன. முதலீட்டாளர்களிடமிருந்து பல கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, பின்னர் அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியதாக முதலீட்டாளர்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இந்தப் பணம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டதா, பணம் தொடர்பாகச் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா என்பதைக் கண்டறியும் நோக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
பிரேம் குமாருடன் தொடர்புடைய கோயம்பேட்டில் உள்ள ஒரு மாலில் இருக்கும் அலுவலகம், வானகரத்தில் உள்ள ஓர் இடம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5,000 கோடி நிதி மோசடி புகார் தொடர்பாகச் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா என்பதை விசாரிக்கவே இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சோதனை முடிவடைந்த பின்னர்தான், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றதா, எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என்று காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேம் குமாரின் வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது, அவர் பெற்ற பணத்தை யாருக்கெல்லாம் வழங்கினார், எந்தெந்தத் தொழில்களில் முதலீடு செய்தார் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையும் சோதனையும் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: #BREAKING மீண்டும் மீண்டுமா? சென்னையில் இருந்து கைதி தப்பியோட்டம்... விஜய் அரசை விடாமல் துரத்தும் சோதனை...!