தமிழக அரசியலில் வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு விவகாரம் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் முக்கிய விஷயமாகும். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அப்போதைய அதிமுக அரசு இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்தது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இருபது சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு பத்து புள்ளி ஐந்து சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சிறப்புச் சட்டத்தை அரசு கொண்டு வந்தது. இது வன்னியர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் முயற்சியாகக் கருதப்பட்டது.
அதே நேரத்தில் இந்த ஒதுக்கீடு தற்காலிகமானது என்றும், முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு அதற்கேற்ப மாற்றியமைக்கப்படும் என்றும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.இந்த நோக்கத்திற்காகவே 2020ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் குறித்த அளவிடக்கூடிய தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை அந்தக் கமிஷன் மேற்கொண்டது. அதற்கு ஆறு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கமிஷன் தனது பணியைத் தொடர்ந்து செய்து வந்தது. மேலும் சில மாதங்கள் தேவைப்படும் என கோரியும் இருந்தது.ஆனால் 2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறியது. குலசேகரன் கமிஷனின் கால அவகாசம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. அதனை நீட்டிக்கும் நடவடிக்கையை புதிய அரசு எடுக்கவில்லை. கமிஷன் மேலும் ஆறு மாதங்கள் கேட்டிருந்த போதிலும் அதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் சாதிவாரி தரவுகள் சேகரிக்கும் பணி நடுவில் நின்று போனது.எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் வழக்குகளுக்கு எதிர்ப்பு..! குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? ஹைகோர்ட்டில் முதல்வர் மறுப்பு..!!
தாங்கள் கொண்டு வந்த பத்து புள்ளி ஐந்து சதவீத இடஒதுக்கீட்டை வலுப்படுத்தும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் வன்னியர் மக்களுக்கு நிரந்தரமான நியாயமான பங்கீடு கிடைத்திருக்கும் என்று அவர் குற்றம்சாட்டினார். ஆனால் திமுக அரசு அந்தக் கால அவகாசத்தை நீட்டிக்காததால் தரவுகள் கிடைக்காமல் போனதாகவும், அதனால் இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டார். இது வன்னியர் சமூகத்தின் நலனுக்கு எதிரான செயல் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: உலக மருத்துவ மைல்கல்... சென்னையில் நுண்துளை கருவிழி சிகிச்சை மையம்.. திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்.!!