சென்னை: மகாராஷ்டிராவில் தரமற்ற உணவகங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தமிழகத்திலும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து உணவு சேவை நிறுவனங்களிலும் சிறப்பு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை 3 மாதங்களுக்கு இந்த ஆய்வு நடைபெற உள்ளது.
தமிழக மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மாவட்ட வாரியாக நியமன அலுவலர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
உணவகங்கள், ஓட்டல்கள் மட்டுமின்றி உணவு விற்பனை நிறுவனங்கள், கிளப்புகள், கேன்டீன்கள், கேட்டரிங் நிறுவனங்கள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், பெட்டிக்கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு சேவை நிறுவனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.
இதையும் படிங்க: ரூ.1.50 டிரில்லியன் பொருளாதார இலக்கு! தமிழகத்தில் அதிரடியாக களமிறங்கும் 20 துறைகள்!
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.யிடம் உரிய சான்றிதழ் பெற்ற நிறுவனங்களை ஆய்வு செய்வதற்கென பிரத்யேக அதிகாரிகள் உள்ளனர். இருப்பினும், சிறப்பு அனுமதியின் அடிப்படையில் இத்தகைய நிறுவனங்களையும் ஆய்வு செய்ய தமிழக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வின்போது உணவு நிறுவனங்களுக்கு உரிய உரிமம் உள்ளதா என்பது முதலில் சரிபார்க்கப்படும். உரிமம் இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், இணையதளம் மூலம் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்தும் வழிகாட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவகங்களின் சமையலறை மற்றும் உணவு சேமிப்பு குடோன் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, பூச்சி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா, பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக பரிசோதிக்கப்படுகிறதா என்பதும் ஆய்வு செய்யப்படும்.
மேலும், உணவகங்களில் பயன்படுத்தப்படும் ப்ரீசர்கள் உரிய வெப்பநிலையில் பராமரிக்கப்படுகிறதா, சமையலறை சுவர்களில் கிரீஸ் மற்றும் எண்ணெய் கறைகள் உள்ளனவா, வெட்டும் கருவிகள் துருப்பிடிக்காத நிலையில் உள்ளனவா என்பதும் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்.
உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்கள் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றுள்ளனரா, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனரா என்பதும் சரிபார்க்கப்படும். கையுறை, தலைக்கவசம் அணிதல், கைகளை முறையாக கழுவுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த உள்ளனர்.
இதுதவிர, உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ திட்ட சேகரிப்பாளர்களிடம் முறையாக ஒப்படைக்கப்படுகிறதா என்பதற்கான பதிவேடுகளும் ஆய்வு செய்யப்படும். தேவையான இடங்களில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்படும்.
மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் வாராந்திர அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த சிறப்பு ஆய்வின் முக்கிய நோக்கமாக கூறப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகளை மீறும் உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை முந்திய புதுச்சேரி! பள்ளிக் கல்வி தரவரிசையில் வெளியான அதிர்ச்சி ரேங்க்! முழு விவரம்!