இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை சரிசெய்யும் வழக்கமான சுருக்கமுறை திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஜூன் 24 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பு, வாக்காளர்கள் தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ், பிறந்த இடம், 1981-க்கு பிறகு பிறந்தவர்கள் தங்கள் பெற்றோரின் பிறப்பிடம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியது.
மேலும், ஆதார் மற்றும் பான் அட்டைகள் இந்தச் சான்றாக ஏற்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை, பீகாரில் 2025 அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவசரமாக அறிவிக்கப்பட்டது. இது பல அரசியல் கட்சிகளிடையே சந்தேகத்தையும் எதிர்ப்பையும் தூண்டியது.

திமுக, இந்த நடவடிக்கையை பாஜகவின் ஆளும் ஒன்றிய அரசின் அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சியாகப் பார்க்கிறது. குறிப்பாக பீகாரில் நடந்த வாக்காளர் சிறப்பு திருத்தம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆதாரும் ஆவணம் தான்! விண்ணப்பியுங்கள்... SIR விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த நிலையில், நாடு முழுவதும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்துவது தொடர்பாக செப்டம்பர் 10 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் SIR மேற்கொள்ளுதல், அதில் உள்ள சவால்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கத்தில் SIR திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பீகாரைத் தொடர்ந்து ஒடிசாவிலும்... ஓயாத பிரச்சனை! அலட்டிக்காத தேர்தல் ஆணையம்..!