இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான (Asian Games 2026) தகுதிச் சுற்றுத் தேர்வுகளில் பங்கேற்பதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. வினேஷ் போகத் பங்கேற்க அனுமதி அளித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துள்ளது.
முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு மகப்பேறு விடுப்பில் (Maternity Leave) இருந்த வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளுக்கு மீண்டும் திரும்ப முயன்றார். ஆனால், ஊக்கமருந்து தடுப்பு விதிகள் மற்றும் சம்மேளனத்தின் புதிய தகுதி விதிகளின்படி, அவர் தகுதிச் சுற்றில் பங்கேற்கத் தகுதியற்றவர் என இந்திய மல்யுத்த சம்மேளனம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், "பிரசவ விடுப்பு எடுத்த ஒரு வீராங்கனையைத் தகுதி நீக்கம் செய்வது ஒருதலைப்பட்சமானது; தாய்மை என்பது வீராங்கனைகளை விளையாட்டிலிருந்து ஒதுக்குவதற்கான காரணியாக இருக்கக் கூடாது" எனக் கூறி, மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆசிய விளையாட்டுத் தகுதிச் சுற்றில் அவர் பங்கேற்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து இந்திய மல்யுத்த சம்மேளனம் அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று (மே 29) விசாரணைக்கு வந்தது. அப்போது வினேஷ் போகத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாதவி திவான், "இந்த விவகாரம் ஒரு பெண்ணின் தாய்மை மற்றும் விளையாட்டு உரிமையோடு தொடர்புடையது. அவருக்கு இந்தத் தகுதிச் சுற்றில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும், இல்லையெனில் அது ஒட்டுமொத்த நாட்டிற்கே சர்வதேச அளவில் ஏமாற்றமாக அமைந்துவிடும்" என்று வாதிட்டார்.
இதையும் படிங்க: "இணையத்தை கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!" உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மேலும், "நாங்கள் உங்களைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை; நீங்கள் தாராளமாகச் சென்று போட்டிகளில் பங்கேற்கலாம்" என்று வினேஷ் போகத் தரப்பிற்கு நேரடி உத்தரவு பிறப்பித்தனர். நாளை (மே 30) தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த இறுதிநேர அதிரடி உத்தரவு வினேஷ் போகத் மீண்டும் சர்வதேச விளையாட்டு அரங்கில் தடம் பதிப்பதற்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.
இதையும் படிங்க: "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!