காங்கிரஸ் கட்சியில் தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, பிரியங்கா காந்தியை கட்சித் தலைவராக்கும் முயற்சிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தற்போது இரண்டு முக்கிய குறிப்புகள் பரவலாக வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதலாவது, மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மக்கன்லால் போத்ததார் எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதி.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய 'போத்ததார் சினார் லீப்ஸ்' என்ற புத்தகத்தில், 1984-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பும் விமானத்தில் தன்னிடம் பேசியதை குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வருங்கால பிரதமர் பிரியங்கா காந்தி?! காங்., எம்.பி-க்கள் சப்போர்ட் அவருக்குத்தான்! கொளுத்தி போடும் ராபர்ட் வாத்ரா!
அதில், "என் அரசியல் வாரிசு பிரியங்கா தான். அவர் தான் பிரதமராக வர வேண்டும்" என்று இந்திரா காந்தி கூறியதாக போத்ததார் எழுதியுள்ளார். இந்தக் குறிப்பு காங்கிரஸ் தலைவர்கள் இடையே பரவலாக விவாதிக்கப்படுகிறது.
இரண்டாவது குறிப்பு, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எழுதிய புத்தகத்திலிருந்து. அதில், ராகுல் காந்தியைப் பற்றி ஒபாமா குறிப்பிட்டுள்ளார். "ராகுல் பதற்றத்துடன் இருப்பவர். அவருக்கு முதிர்ச்சி இல்லை. ஆசிரியரின் பாராட்டைப் பெற விரும்பும் மாணவனைப் போல இருந்தாலும், அதற்கான தகுதி இல்லாதவர் ராகுல்" என்று ஒபாமா எழுதியுள்ளார். இந்த இரண்டு குறிப்புகளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றன.

பிரியங்கா காந்தியின் ஆதரவாளர்கள், "ராகுலை விட பிரியங்காவுக்கு அரசியல் விஷயங்கள் நன்றாகத் தெரியும். அவரால் மட்டுமே காங்கிரஸ் கட்சியை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்" என்று கூறி, இந்தக் குறிப்புகளை வினியோகித்து வருகின்றனர். மேற்கூறிய மாநிலத் தேர்தல்கள் முடிந்த பிறகு, இந்த முயற்சிகள் தீவிரமடையும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது. கட்சியின் உள் விவாதங்கள் மற்றும் தலைமை மாற்றம் குறித்து அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ராகுல்காந்திக்கு சொந்த கட்சிக்குள்ளேயே வலுக்கும் எதிர்ப்பு! பிரியங்கா கையில் பொறுப்பு தர காங். தலைவர்கள் திட்டம்!