இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைக்கவும் அமைதியான முடிவை நோக்கி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் நாங்கள் அழைப்பு விடுகிறோம் என்று ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டும் இந்தியா தாக்கி அழித்தது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் தாக்குதலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தியாவின் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்தியாவும் இதற்கு தீர்க்கமான பதிலடியை வழங்கி வருகிறது.

அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக இந்தியாவும் நாடுகளும் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே பல நாடுகளும் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று இரண்டு நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 கூட்டமைப்பும் இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக ஜி7 கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஜி 7 வெளியுறவுத் துறை அமைச்சர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதிகளுமான நாங்கள் ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். மேலும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும் ராணுவ மோதல்கள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இதையும் படிங்க: பாகிஸ்தானின் தாக்குதல்களை சுக்கு நூறாக்கிய இந்திய ராணுவம்.. இந்திய பதிலடியில் பொறி களங்கிய பாகிஸ்தான்!!

இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பில் நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். உடனடியாக பதற்றத்தைக் குறைக்கவும் அமைதியான முடிவை நோக்கி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட இரண்டு நாடுகளையும் ஊக்குவிக்கவும் நாங்கள் அழைப்பு விடுகிறோம். தற்போதைய நிகழ்வுகளை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். விரைவான மற்றும் நீடித்த ராஜதந்திர தீர்மானத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம்." என்று அறிக்கையில் ஜி7 கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய ட்ரோன்களை இதுனாலதான் நாங்க சுடவில்லை... பாக். அமைச்சரின் பகீர் விளக்கம்!!