2024 ஜூலை 30 அன்று வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட கொடிய நிலச்சரிவில் வீடு, உடமைகள், வாழ்வாதாரத்தை இழந்த 555 பேரின் வங்கிக் கடன்களை ரூ.18.75 கோடி அளவுக்கு கேரள மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்தத் தொகை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (CMDRF) வங்கிகளுக்கு செலுத்தப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மொத்தம் 1,620 கடன்களை உள்ளடக்கிய இந்தத் தொகை ரூ.18,75,69,037.90 ஆகும். இதில் ரூ.10 லட்சம் வரையிலான கடன்கள் ரூ.16.91 கோடியாகவும், அதற்கு மேற்பட்டவை ரூ.1.84 கோடியாகவும் உள்ளன. பயனாளிகளில் 466 குடும்பங்கள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் (பிரிவு 1, 2ஏ, 2பி) அடங்கியுள்ளனர். முழுமையாக அல்லது பகுதியாக வீடு மற்றும் நிலத்தை இழந்த குடும்பங்கள், நிலச்சரிவில் உயிரிழந்தோரின் 12 குடும்பங்கள், 36 சிறு வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள், வாழ்வாதாரத்தை இழந்த 61 பேர் ஆகியோர் இதில் அடங்குவர்.
இதையும் படிங்க: இந்தோனேசியாவை உலுக்கிய நிலச்சரிவு..!! பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு..!! மீட்புப் பணிகள் தீவிரம்..!!
மத்திய அரசு இந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்த நிலையில், மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-இன் பிரிவு 13-இன் கீழ் கடன் தள்ளுபடிக்கு பரிந்துரைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதியும், வங்கி அதிகாரிகளுடன் பேசியும் முயன்றார். ஆனால், பிரிவு 13 நீக்கப்பட்டதாகக் கூறி மத்திய அரசு மறுத்ததால், மாநில அரசு சொந்தமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
வருவாய்த் துறை அமைச்சர் கே. ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, 555 பேரின் மொத்தக் கடன் தொகையை ரூ.18.75 கோடியாகக் கண்டறிந்துள்ளோம். இதை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும். ஜூலை 30, 2024 முதல் கடன் திருப்பிச் செலுத்தல் இடைநிறுத்தம் (மொராட்டோரியம்) அமலில் உள்ளது. சில வங்கிகள் வட்டி வசூலித்திருந்தால், அவற்றைத் தள்ளுபடி செய்ய மாநில வங்கியாளர்கள் குழுவிடம் (SLBC) கோருவோம். கடன் பெற்றோரின் சிபில் ஸ்கோர்களையும் சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.”
மேலும், தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பேரிடர் மேலாண்மை மற்றும் நிதித் துறை செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பயனாளிகள் பட்டியலில் சேர்க்கை அல்லது நீக்கம் குறித்து முடிவெடுக்க இக்குழு பொறுப்பேற்கும். புகார்களை இக்குழுவிடம் அளிக்கலாம்.

வயநாடு நிலச்சரிவு முண்டக்கை-சூரல்மலா பகுதிகளை பெரிதும் பாதித்தது. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், 32 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். நான்கு கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. இதனால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கு மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கடன் ஏற்பு முடிவு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிதி நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தோனேசியாவை உலுக்கிய நிலச்சரிவு..!! பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு..!! மீட்புப் பணிகள் தீவிரம்..!!