மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக முக்கிய தெளிவுபடுத்தல் வழங்கியுள்ளார். “எரிபொருள் விலைக்கும் தேர்தல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என அவர் உறுதியாகக் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அமைச்சர், “இந்தியாவில் சமையலறைகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட அரசு அனுமதிக்கவில்லை. சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தற்போது எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. மக்களிடையே பீதியைப் பரப்ப அனுமதிக்கவில்லை” என்றார்.
தேர்தல் காரணமாகவே விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சிலர் கூறுவதை நிராகரித்த அவர், “கடந்த நான்கு ஆண்டுகளில் பல தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஆனாலும் எரிபொருள் விலைகளுக்கும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தெளிவுபடுத்தினார். நேரம் வரும்போது அரசு தேவையான முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மட்டும் தடுக்காம இருந்திருந்தா?! இன்னைக்கு நிலைமையே வேற!! மத்திய அமைச்சகம் தகவல்!!
பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டமான 33 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் பணி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். கச்சா எண்ணெய் கொள்முதலை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளாக அதிகரித்துள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகளை மட்டும் சாராமல் அமெரிக்கா, நார்வே, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் எல்பிஜி இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

உள்நாட்டு உற்பத்தியை 60 சதவீதம் அதிகரிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேற்கு ஆசிய மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி ஏற்றி வரும் இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் துறையில் இந்தியா தன்னிறைவு நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். சர்வதேச சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்கும் வகையில் பல்வேறு நாடுகளுடன் கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு வலுப்பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தற்போது எரிபொருள் விலை உயர்வு குறித்த பரபரப்புக்கு மத்தியில் அமைச்சரின் இந்த அறிக்கை மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இருப்பினும், சர்வதேச சூழல் காரணமாக எதிர்காலத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!