திருப்பதி கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆய்வக பரிசோதனை அறிக்கை வெளியானது.

அதில், நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதை அடுத்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்யும் திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார் அளித்தது. திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்ததாக அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க முடியுமா.? பாயிண்டைப் பிடித்த பாஜக!!

இதனால் திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய், திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தயார் ஆனது எனக் கூறி அதன் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய உத்தரவை ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

நெய் மட்டுமின்றி பால் பொருள் உற்பத்திக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ததால் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கிளையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் சென்னை நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயணன் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு.. ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!