காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார்.

அதன் எதிரொலியாக பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து என அடுத்தடுத்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்தது. ராணுவ தளபதி திவேதி ஸ்ரீநகர் சென்று கள நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் சின்ஹாவை சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ராணுவம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
பாகிஸ்தான் நாட்டவருக்கான அனைத்து வகை விசாக்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதையும் படிங்க: தாழ்வாக பறந்த போர் விமானங்கள்; பெரம்பலூரில் பரபரப்பு - காரணம் என்ன?

இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் இம்மாத இறுதிக்குள் தங்கள் நாட்டிற்கு திரும்பும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக இருநாட்டிற்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எல்லையில் தினம்தோறும் இருநாட்டு ராணுவ வீரர்களிடயே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. இந்த நேரத்தில் இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ x தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் எனக் குறிப்பிட்டு ராணுவத்தினரின் பயிற்சி காட்சியையும் வெளியிட்டுள்ளது. நாங்கள் எதற்கும் பயப்படவில்லை, எதுவும் எங்களை தடுக்காது எனவும் பதிவிட்டுள்ளது. இதேபோல் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. இதன்படி ஒற்றுமையில் தான் சக்தி இருக்கிறது.. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படி வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம் எனும் வார்த்தைகளோடு 5 போர் கப்பல்களின் புகைப்படங்களை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே விசாகப்பட்டிணத்தில் உள்ள கிழக்கு கடற்படை வீரர்களுடன் கிழக்கு கடற்படை தளபதி துணை அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் கலந்துரையாடல் நடத்தினார். இந்த உரையாடலின் போது, துணை அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர், தற்போதைய பாதுகாப்பு சூழலை எடுத்துரைத்தார். கடற்படை தயார் நிலையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அனைத்து கடற்படை வீரர்களும் விழிப்புடன் இருக்கவும், வளர்ந்து வரும் சவால்களையும் எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருக்கவும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கா விரைவுச் சாலையில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாஜகான்பூரில் உள்ள கங்கா விரைவுச்சாலையில், ரபேல், ஜாகுவார் மற்றும் மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரையிறுக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டனர்.


இரவு மற்றும் பகல் நேரங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் விதமாக, இந்தியாவில் முதல் ஓடுதளமாக கங்கா விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மிராஜ், ஜாகுவார், அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை தரையிறக்கி விமானப்படை ஒத்திகை செய்து வருகிறது. இது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1,000 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதலோடு முடியப்போறது இல்லை.. பாக்., ஐ.எஸ்.ஐ-யின் அடுத்த பிளான் தெரியுமா? பகீர் கிளப்பும் என்.ஐ.ஏ!!