இந்தியக் கடற்படையின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் இன்று சர்வதேசக் கடற்படை ஆய்வு (International Fleet Review - IFR 2026) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. முப்படைகளின் தலைமைத் தளபதியும், இந்தியக் குடியரசுத் தலைவருமான திருமதி திரௌபதி முர்மு அவர்கள், இந்தியக் கடற்படையின் போர்த்திறன் மற்றும் வலிமையை அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்தார்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் சுமேதா (INS Sumedha) என்ற ரோந்துக் கப்பலில் இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் கடற்படையினரின் அணிவகுப்பை ஆய்வு செய்தார். அவருக்குக் கடற்படை சார்பில் 'கார்டு ஆஃப் ஹானர்' மரியாதை வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 74 நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் பங்கேற்றன. நட்பு நாடுகளின் 19 போர்க்கப்பல்கள் உட்பட மொத்தம் 85 போர்க்கப்பல்கள் கடலில் அணிவகுத்து நின்றன.
இதையும் படிங்க: குடியரசு தின விழா 2026: சிறந்த அணிவகுப்பு குழுவாக இந்திய கடற்படை தேர்வு..!!

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant) இந்த நிகழ்வின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது. இவற்றுடன் ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போன்ற அதிநவீனப் போர்க்கப்பல்களும், 3 நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை உலகிற்குப் பறைசாற்றின. கடற்படை விமானப் படையைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானில் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
இந்த ஆண்டு IFR நிகழ்வானது United Through Oceans (கடல்கள் வழியாக இணைவோம்) என்ற உன்னதக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. இது நாடுகளுக்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பையும், அமைதியையும் வலியுறுத்துகிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தையும், தன்னிறைவு இந்தியா (Atmanirbhar Bharat) திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்களின் சிறப்பையும் இந்த நிகழ்வு சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர், முப்படைத் தளபதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கடற்படைத் தலைவர்கள் இந்த வரலாற்றுத் தருணத்தில் சாட்சியாக இருந்தனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றம் செல்லும் முன் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு: நிர்மலா சீதாராமனுக்கு ‘தயிர்-சர்க்கரை’ ஊட்டி வாழ்த்து!