இளையராஜா, 1976ஆம் ஆண்டு அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, 8,600-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கிய இவர், இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
அவரது பாடல்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உலகளவில் ரசிகர்களைப் பெற்றவை. இவரது இசைப் படைப்புகள் பல திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
இளையராஜாவின் பாடல்களின் காப்புரிமை தொடர்பாக பல ஆண்டுகளாக சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. இதில் ஒரு முக்கிய வழக்காக, சோனி மியூசிக் நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ராபர்ட் ப்ரூஸ் வெற்றிக்கு எதிர்ப்பு! நயினார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை..!

2022ஆம் ஆண்டு, சோனி மியூசிக் நிறுவனம் இளையராஜாவின் நிறுவனத்திடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இளையராஜா இசையமைத்த பாடல்களின் காப்புரிமை மற்றும் ராயல்டி ஒப்பந்தங்களை மீறியதாக சோனி நிறுவனம் குற்றம்சாட்டியது.
இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இளையராஜா தரப்பு இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.இளையராஜாவின் வாதம், தனது இசைப் படைப்புகளின் மீது தனக்கு முழு உரிமை உள்ளது என்பதாகும்.
சோனி மியூசிக் நிறுவனம் உள்ளிட்ட இசை வெளியீட்டு நிறுவனங்கள், அவரது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாகவும், இதனால் தனக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார். மும்பை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய இளையராஜா மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: கோவை குண்டுவெடிப்பு சம்பவம்... 12 பேரை விடுவிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!